×

இனி யாரும் ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது : உலகிலேயே சிசிடிவி கேமராக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு முதலிடம்!!

சென்னை : உலகிலேயே சிசிடிவி அதிகமுள்ள பெருநகரங்களின் பட்டியலில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அடர்த்தி விகிதத்தில் லண்டன், பெய்ஜிங் நகரங்களை பின்னுக்குத் தள்ளியதாக விபின் என்ற நிறுவனம் நடத்திய சர்வதேச அளவிலான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிக்கவும் உலகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. சென்னையிலும் மாநகர காவல்துறை சிசிடிவி கேமராக்களை பொருத்துவதில் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதனின் முயற்சியால், வர்த்தகர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களின் உதவியுடன் சுமார் இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டன.

அதன் பலனாக இன்று சென்னையில் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இந்த நிலையில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எத்தனை சிசிடிவி கேமராக்கள் என்பது குறித்து 130 நகரங்களில் விபிஎன் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அடர்த்தி விகிதத்தில் உலகிலேயே சிசிடிவி அதிகமுள்ள பெருநகரங்களின் பட்டியலில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

இந்த சர்வதேசப் பட்டியலில் இரண்டாம் இடத்தையும் இந்திய நகரமே பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 480 சிசிடிவி கேமிராக்கள் என ஹைதராபாத் நகரம் உள்ளது. 289 கேமிராக்கள் உடன் தலைநகர் டெல்லி மூன்றாம் இடத்திலும் உள்ளன.முதல் 10 இடங்களில் டாப் 3 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அடுத்ததாக டாப் 10 பட்டியலில் 6 இடங்களை சீன நகரங்கள் பிடித்துள்ளன. சீன தலைநகர் பெய்ஜிங் 10ம் இடத்தை பிடித்துள்ளது. ஆனால் மொத்த எண்ணிக்கையில் 11 லட்சம் கேமராக்களுடன் இந்த நகரமே உலகின் முதலிடத்தில் உள்ளது.


Tags : No one ,cities ,world ,Chennai , CCTV, Cameras, Cities, List, Chennai
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்