சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவி ஏற்பு!: தமிழக ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றுள்ளார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சஞ்ஜிப் பானர்ஜிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 1961ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி கொல்கத்தாவில் பிறந்த சஞ்ஜிப் பானர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டபடிப்பை முடித்ததன் பின்பாக 1990ம் ஆண்டு தன்னை வழக்கறிஞராக பதிவு செய்துக் கொண்டுள்ளார். கொல்கத்தா, டெல்லி, ஜார்கண்ட், அலகாபாத், மும்பை ஆகிய உயர்நீதிமன்றங்களில் சஞ்ஜிப் பானர்ஜி பணியாற்றி உள்ளார். குறிப்பாக நிறுவன சட்டங்கள், சமரச தீர்வு, அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றில் மிகப்பெரிய நிபுணராக இவர் இருந்துள்ளார். 2006ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியாக அவர் இருந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் கடந்த 31 ம் தேதியோடு முடிவடைந்தது. தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம் தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்ஜீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் இந்த பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செல்லவிருக்கும் தலைமை நீதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மூத்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் முடிவு செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் 50வது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>