×

வடசென்னையில் கடமைக்கு கூட கடைகளில் ஆய்வு செய்யாமல் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனைக்கு மறைமுக அனுமதியளிக்கும் அதிகாரிகள்: நோய் பாதிப்பில் தவிக்கும் பொதுமக்கள்

பெரம்பூர்: வடசென்னையில் உள்ள உணவகங்கள், கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடமைக்கு கூட ஆய்வு செய்யாமல், தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனைக்கு மறைமுக அனுமதியளிப்பதால் நோய் பாதிப்பில் தவிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பொதுமக்களுக்கு தரமான உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், தரமற்ற பொருட்கள் விற்பனையை தடுக்கவும் அரசு உணவு பாதுகாப்பு துறையை உருவாக்கி, அதிகாரிகளை நியமித்துள்ளனர்.
இவர்கள், ஒவ்வொரு பகுதியிலும் செயல்படும் உணவகங்கள், டீக்கடை, சிற்றுண்டி, பல்பொருள் அங்காடி, தண்ணீர் கேன் நிலையம் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து, உணவு பொருட்களின் தரம், அதில் கலப்படம் உள்ளதா, உணவு பொருட்களில் சுவை மற்றும் நிறத்திற்காக அதிகப்படியான கலர் மற்றும் வேதிப்பொருள் கலந்துள்ளதா, காலாவதி தேதிக்குள் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறா உள்ளிட்டவை குறித்து சோதனை செய்ய வேண்டும். விதிமீறி செயல்படும் கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு காலத்தில் குறைந்தளவில் காணப்பட்ட துரித உணவகங்கள், கையேந்தி பவன்கள் தற்போது அதிகளவில் பெருகி, ஒரு தெருவில் 3, 4 கடைகள் வரை உள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகளில் தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதால், பொதுமக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உணவு பாதுகாப்பு துறையில் வேலை செய்யும் அதிகாரிகள் எண்ணிக்கை வெறும் 20 பேர் மட்டுமே. அதிலும் 2 பேர் விடுப்பில் உள்ள நிலையில் 18 பேர் மட்டுமே ஒட்டுமொத்த சென்னையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களால் ஒரு நாளைக்கு எத்தனை கடைக்கு சென்று ஆய்வு செய்ய முடியும் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இதனால், சென்னையில் பல்வேறு இடங்களிலும் உணவகங்களில் கலப்படங்கள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, வட சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பல மாதங்கள் ஆகிவிட்டன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள பெரம்பூர் நெடுஞ்சாலை மற்றும் பேப்பர் மில்ஸ் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, ஓட்டேரி ஸ்டரன்ஸ் ரோடு, பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெரு, எம்கேபி நகர் மேம்பாலம் கீழ் பகுதி. கொளத்தூர் சிவ இளங்கோ சாலை, கொளத்தூர் ஜவஹர் நகர் 1வது மெயின் ரோடு, ஜம்புலிங்கம் மெயின் ரோடு, செங்குன்றம் நெடுஞ்சாலை, பெரம்பூர் பட்டேல் சாலை உள்ளிட்ட பல இடங்களில் ஒரே இடத்தில் அளவுக்கு அதிகமான துரித உணவகங்கள் மற்றும் உணவகங்கள் இயங்கி வருகின்றன.

இங்குள்ள பெரும்பாலான கடைகளில் நிறம் மற்றும் அதிக சுவையூட்டும் ரசாயன பொடிகள் மற்றும் அஜினமோட்டோ, தரமற்ற இறைச்சி பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த ஒரு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியும் இந்த இடங்களில் ஆய்வு செய்யவில்லை. பொதுமக்களும் வேறு வழியின்றி அவற்றை வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, வட சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் சிலர் தரமற்ற குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

பல்பொருள் அங்காடிகளில் காலாவதியான பொருட்களை கூட தேதி மாற்றி புதிய பொருள் போல் விற்பனை செய்யப்படுகிறது. இதை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபற்றி தெரிந்தும் அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். உணவு பாதுகாப்பு துறையில் தேவையான ஆட்களை நியமித்து, மாதத்திற்கு ஒரு முறையாவது அனைத்து கடைகள், உணவகங்களில் முறையாக ஆய்வு நடத்தி, விதிமீறி செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. சென்னையில் 20 உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மட்டுமே உள்ளதால் இவர்களால் எத்தனை கடைக்கு சென்று ஆய்வு செய்ய முடியும் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

* மாதம்தோறும் வசூல் வேட்டை
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒவ்வொரு ஏரியாவிலும் தங்களுக்கென ஒருவரை நியமித்து, அவர்கள் மூலமாக பல்பொருள் அங்காடி, உணவகங்கள், துரித உணவகம், குடிநீர் நிலையம் ஆகியவற்றில் மாதம்தோறும் வசூலில் ஈடுபடுகின்றனர். இதனால் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை.

Tags : North Chennai ,public ,shops , Officials in North Chennai indirectly authorize the sale of substandard food items without even inspecting the shops on duty: the general public suffering from the disease
× RELATED வாக்கு பெட்டி தவறி விழுந்ததில் காவலரின் கை எலும்பு முறிந்தது