×

எளாவூர் சோதனை சாவடியில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது: 40 கிலோ பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிரசோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து கார், லாரி, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தனிப்பிரிவு காவலர் நாராயணன், சோதனை செய்தார். அந்தவழியாக வந்த தமிழக அரசு பேருந்தை மடக்கிப் பிடித்தனர். சோதனையில் 3 பைகளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக திருச்சியை சேர்ந்த அசாருதீன்(30), சதாம் உசேன்(29), ரவி(35), மணிகண்டன்(28) ஆகியோரை போலீசார் கைது செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் கொண்டு வந்தனர். விசாரணையில் நெல்லூர் இருந்து சென்னைக்கு 30 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக கூறினர்.

இதேபோல், கவரப்பேட்டை போலீசார் சத்தியவேடு சாலையில் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா இருந்தது. தொடர்ந்து இரண்டு பேரை கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார்(47), ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திதை சேர்ந்த பாலராஜ்(31) என தெரியவந்தது. போலீசார் 6 பேரையும் கைது செய்து 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். 


Tags : Elavur , 6 arrested for smuggling cannabis at Elavur check post: 40 kg seized
× RELATED எளாவூர் சோதனைசாவடியில் 20 கிலோ கஞ்சா...