மொபட் மீது லாரி மோதி கல்லூரி மாணவன், இளம்பெண் பலி: திருநின்றவூரில் சோகம்

திருநின்றவூர்: திருநின்றவூர் அடுத்த புலியூர் கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(20). இவர், வேப்பம்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ, 3ம் ஆண்டு படித்து வந்தார். இவரது உறவினர்கள் சத்யபிரியா(18), சந்தியா (20). இவர்கள் இருவரும் திருநின்றவூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் ஊழியர்கள். இந்நிலையில், நேற்று காலை வெங்கடேசன் தனது மொபட்டில் சத்தியபிரியா, சந்தியா ஆகிய இருவரையும் வேலைக்கு சூப்பர் மார்க்கெட்டுக்கு அழைத்து சென்றார். இவர்கள் திருநின்றவூர் - பெரியபாளையம் நெடுஞ்சாலை, நத்தம்பேடு பகுதியில் மொபட்டில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, எதிரே சிமென்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில், மூவரும் தூக்கி வீசப்பட்டு லாரி சக்கரத்தில் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்திலேயே வெங்கடேசன், சத்யபிரியா இருவரும் உடல் நசுங்கி பலியாகினர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சந்தியாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருநின்றவூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories:

>