×

3ம் கட்ட பரிசோதனை முடியாமல் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி தந்தது ஆபத்தானது: காங்கிரஸ் அதிருப்தி

புதுடெல்லி: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் முடியாத நிலையில், முன்கூட்டியே அதற்கு அனுமதி அளித்திருப்பது மிகுந்த ஆபத்தானது என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை விவகார நாடாளுமன்ற குழு தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆனந்த் சர்மா கூறியதாவது: கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் மிக அவசியமானது. இதுவரை எந்த ஒரு நாடும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையை முடித்து தரவுகளை ஆய்வு செய்து அனுமதி வழங்கவில்லை. எனவே, கொரோனா மருந்து அனுமதி வழங்கும் விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

தற்போது இந்தியாவில் அனுமதி தரப்பட்டுள்ள தடுப்பூசிகள் 3வது கட்ட மருத்துவ பரிசோதனையை நிறைவு செய்யவில்லை. அந்த மருந்துகளின் பாதுகாப்பு அம்சம், திறன் ஆகியவையும் மறுஆய்வு செய்யப்படவில்லை. இவை இரண்டுமே கட்டாயமாகும். எனவே, இரு மருந்துகளுக்கும் அனுமதி வழங்கிய விவகாரத்தில் கட்டாய நெறிமுறைகளையும், தேவைகளையும் உறுதி செய்ய வலுவான காரணங்களை மத்திய சுகாதார அமைச்சகம் கூறுவது அவசியம். ஏனென்றால் இந்த மருந்துகள் முன்களப் பணியாளர்கள் ஏராளமானோருக்கு செலுத்தப்பட இருக்கின்றன.

மேலும், மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையும் குழப்பமாக இருக்கிறது. உலகளவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் புள்ளிவிவரங்கள், இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் இறுதி விவரங்களை இந்திய அரசு கண்டிப்பாக வெளியிட வேண்டும். இங்கிலாந்து, இந்திய அரசு கையொப்பமிட்ட ஒப்பந்தத்தையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும். 3ம் கட்ட பரிசோதனை முடியாத நிலையில், அவசரகாலத்துக்கு மட்டும் மருந்துகளை பயன்படுத்திக்கொள்ள அளி்த்த அனுமதி பல்வேறு உடல்நலம் சார்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகள் ஏன் கோவாக்சின் மருந்துக்காக மாற்றப்பட்டன என்பது குழப்பமாக இருக்கிறது’’ என்றார். சசிதரூர் கூறுகையில், ‘‘3ம் கட்ட பரிசோதனை முடியாமல் முன்கூட்டியே அனுமதி தந்திருப்பது மிகவும் ஆபத்தானது’’ என எச்சரித்துள்ளார்.

* பாஜ கண்டனம்
காங்கிரஸ் தலைவர்கள் கருத்து குறித்து பாஜ தேசிய தலைவர் ஜேபி.நட்டா தனது டிவிட்டர் பதிவில், ‘‘காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் எந்த இந்திய பொருட்கள் பற்றியும் பெருமை கொள்ள மாட்டார்கள். எப்படியெல்லாம் பொய்களை சொல்லி குழப்பலாம் என்று தான் அவர்கள் பார்ப்பார்கள். இதற்கு முன் ராணுவ வீரர்கள் விஷயத்தில் மட்டம் தட்டினர். இப்போது தடுப்பூசிக்கு வந்து விட்டனர்’’ என்றார்.

Tags : phase ,Congress , It is dangerous to allow corona vaccine without phase 3 testing: Congress dissatisfied
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...