×

உத்தரப்பிரதேசத்தில் இறுதிசடங்கின் போது விபரீதம் மயான கூரை இடிந்து 23 பேர் பலி: 15 பேர் படுகாயம்

காஸியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறுதிசடங்கின் போது மயான கூரை இடிந்து விழுந்து 23 பேர் பலியாகினர். உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள முராத் நகரின் உக்லர்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய் ராம். கடந்த இரு தினங்களுக்கு முன் காலமானார். இவரது இறுதிச்சடங்கு அப்பகுதியில் உள்ள மயானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கொட்டும் மழையில் ஈமச்சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் மயானத்திற்கு வந்திருந்தனர். அப்போது திடீரென மயான கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

அப்போது, மேற்கூரையின் கீழ் நின்றிருந்திருந்தவர்கள் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலர் பலியாகினர். இது குறித்து போலீசாருக்கும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். மோப்ப நாய் உதவியுடனும் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் இருந்து 23 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தலா 2 லட்சம் நிவாரண நிதியும் அறிவித்துள்ளார். இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உபி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உள்ளனர்.

Tags : Uttar Pradesh ,funeral ,roof collapse , 23 killed, 15 injured in Uttar Pradesh roof collapse during funeral
× RELATED உ.பி.யில் திருமண ஊர்வலத்திற்காக காரை...