நியூசிலாந்துடன் இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் பாக். 297 ரன் குவிப்பு: 93 ரன் விளாசினார் அசார் அலி

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 297 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஷான் மசூத், அபித் அலி இருவரும் பாகிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். ஷான் டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, அபித் அலி - அசார் அலி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தது. அபித் 25 ரன் எடுத்து ஜேமிசன் வேகத்தில் சவுத்தீயிடம் பிடிபட்டார். அடுத்து வந்த ஹரிஸ் சோகைல் 1, பவாத் ஆலம் 2 ரன் எடுத்து ஜேமிசன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, பாகிஸ்தான் 83 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், அசார் அலியுடன் இணைந்த கேப்டன் முகமது ரிஸ்வான் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். ரிஸ்வான் 61 ரன் (71 பந்து, 11 பவுண்டரி) விளாசி ஜேமிசன் வேகத்தில் விக்கெட் கீப்பர் வாட்லிங் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசார் அலி 93 ரன் (172 பந்து, 12 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார். பாஹீம் அஷ்ரப் 48, ஜாபர் கோஹர் 34, ஷாகீன் அப்ரிடி 4, நசீம் ஷா 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 297 ரன் குவித்து ஆல் அவுட்டானது (83.5 ஓவர்). அப்பாஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. பந்துவீச்சில் கைல் ஜேமிசன் 21 ஓவரில் 8 மெய்டன் உட்பட 69 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். சவுத்தீ, போல்ட் தலா 2, ஹென்றி 1 விக்கெட் வீழ்த்தினர். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் நாளான இன்று நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடுகிறது.

Related Stories:

More