×

தேர்தலுக்கு பிறகு பொதுத் தேர்வு நடத்தலாம்: முனைவர் முருகையன் பக்கிரிசாமி, கல்வியாளர்

எப்போதுமே நிழல் என்பது நிஜமாக முடியாது. தேர்வு நடத்தும் முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். மாணவர்களை நேரடியாக அழைத்து அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து தேர்வு நடத்துவது தான் எப்போதுமே உள்ள வழக்கம். ஆனால், கொரோனா காலகட்டத்தில் அதுபோன்று இல்லாமல் பாடங்களை ஆன்லைனிலேயே நடத்தினர். ஆன்லைனில் பாடங்களை நடத்தும்போதே, அது மாணவர்களுக்கு புரியாத புதிர் போன்று இருந்தது. பல மாணவர்களால் பாடங்களை கவனிக்க முடியவில்லை. இதுபோன்ற சூழலில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்பது சரியானது கிடையாது. எனவே, மாணவர்களுக்கு நடத்தும் தேர்வு முறைகளை அரசு மாற்ற வேண்டும்.

தேர்வு என்ற அச்சமே மாணவர்களுக்கு ஏற்படாத வகையில் தேர்வுகளை அரசு நடத்த வேண்டும். கொரோனா நோய் தொற்று தாக்கத்தினால் பல்வேறு சூழலில் மாணவர்களும், பெற்றோர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார அளவில் பெற்றோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனதளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் சிந்திக்கும் திறனும் குறைந்துள்ளது. இதேபோல், வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் கவனித்தபோது அவர்களுக்கு கண் பிரச்னை, நரம்பு மண்டல பிரச்னை போன்ற உடல்ரீதியான பிரச்னைகளும் எழுந்தது. என்னதான் மாணவர்களுக்கு ஆன்லைனில் யோகா வகுப்புகளை நடத்தினாலும் அவர்கள் நேரடியாக சென்று பாடம் கற்பது போல் இந்த ஆன்லைன் வகுப்புகள் இல்லை. 6 மணி நேரத்துக்கும் மேலாக மாணவர்கள் ஆன்லைன் கல்வியை தினம்தோறும் கற்றது அவர்களுக்கு மன அழுத்தத்தையே ஏற்படுத்தியது.

இந்தநிலையில், தேர்வுகள் அறிவிப்பு என்பது மாணவர்கள் மத்தியில் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்பு சரியாக கிடைக்கப்பெறாத மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் தங்களின் திறமையை சரியாக வெளிக்காட்ட முடியாது. எனவே, தேர்வு அவசியம் தான். அதே நேரத்தில் அரசு நடத்தும் தேர்வுகள் மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். மாணவர்கள் என்ன படித்தார்களோ அதையே தேர்வாக எழுத வைக்க வேண்டும். 2 முதல் 3 மணி நேரம் நடைபெறும் தேர்வு முறைகளை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக கடந்த ஓராண்டில் மாணவர்கள் என்ன படித்தார்களோ அதில் இருந்து மிக எளிமையான கேள்விகளை கொடுத்து தேர்வு வைக்க வேண்டும்.

தேர்வு நேரத்தை குறைக்க வேண்டும். எல்லோரும் தேர்வு எழுதும் வகையிலும், மாணவர்கள் ஆர்வமாக தேர்வு எழுத வைக்கும் வகையிலும் பொதுத்தேர்வு வடிவமைப்புகளை அரசு மாற்ற வேண்டும். கல்வியாளர்கள், ஆசிரியர்களை கொண்டு ஒரு குழு அமைத்து ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு என்ன கற்பிக்கப்பட்டதோ அதை மிக எளிமையாக கேள்விகளாக அமைத்து மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும். தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சூழலில் பொதுத்தேர்வு நடத்துவதையும் ஒத்திவைக்கலாம். தேர்தல் முடிந்த பிறகே பொதுத்தேர்வை நடத்தலாம்.

தேர்வை பகுதி வாரியாக நடத்தினாலும் சிறப்பாக இருக்கும். பொதுத்தேர்வை சுமையாக ஆக்காமல் தேர்வை நடத்தினாலே போதும். இதேபோல், மதிப்பெண்கள் கொடுக்கும் முறையையும் மாற்ற வேண்டும். மாணவர்கள் உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்படாத வகையில் தேர்வு நடத்த வேண்டும். கொரோனா நோய் தொற்று தாக்கத்தினால் பல்வேறு சூழலில் மாணவர்களும், பெற்றோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார அளவில் பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மனதளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் சிந்திக்கும் திறனும் குறைந்துள்ளது.

* கல்வியை கொடுக்காமல் தேர்வு எழுத சொல்வது நியாயமற்றது:  கல்யாணந்தி, கல்வி ஆலோசகர்
பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்க முடியாது என்பதால் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ஆன்லைன் கல்வி முறை எத்தனை குழந்தைகளுக்கு சரியான முறையில் கிடைத்துள்ளது என்பது பெரிய கேள்வியாக உள்ளது. செல்போன்கள், இணையதள சேவை வசதி இல்லாத மாணவர்களுக்கு கல்வி முறையாக செல்லவில்லை. ஆன்லைன் கல்வி முறை மூலம் பாடத்தில் என்ன இருக்கிறது என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

நேரடியாக பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் பாடம் கற்கும் போதே அவர்களுக்கு அதை புரிய வைப்பதில் பெரும் சிரமம் ஏற்படும். இப்படி இருக்கும் போது ஆன்லைன் கல்வியில் மாணவர்களுக்கு பாடங்கள் என்பது முறையாக எடுக்க முடிவதில்லை. பல மாணவர்களும், ஆசிரியர்களுமே இதை எங்களிடம் தெரிவித்துள்ளனர். மன உளைச்சல் காரணமாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை செய்துகொண்டதை நம்மால் காண முடிந்தது. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு தாழ்வுமனப்பான்மையை வளர்த்தது.

இந்த கல்வி முறை என்பது மாணவர்கள் ஒரே மாதிரியானவர்கள் என்பதை காட்ட மறுக்கிறது. வசதி இருப்பவர்களுக்கு சரியான கல்வியும், வசதி அற்றவர்களுக்கு கல்வி கிடைப்பதில் பெரும் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தியது. பாடத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் பரீட்சை எழுதி ஒரு மாணவன் அடுத்த வகுப்பிற்கு செல்லும் போது அவனது வாழ்க்கையை சரியாக அமைத்துக்கொள்ள முடியாது. 10ம் வகுப்பு மாணவர்களை விட இது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் சிரமமான ஒன்றாகவே மாறிவிடுகிறது. இதேபோல், நேரடியாக சென்று கல்வி பெறும் மாணவர்களும் தங்களால் ஒரு ஈடுபாடான கல்வியை கற்க முடியாத சூழலே ஏற்படும். மேலும், பொது தேர்வை மாணவர்கள் எப்படி தேர்வு எழுத போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

ஏற்கனவே, ஆன்லைன் கல்வியால் மாணவர்களை விட பெற்றோர்களே அதிகம் சிரமத்தை சந்தித்தார்கள். இதை கண்கூடாகவே காணமுடிந்தது. ஒரு நேரடி கல்வியை கொடுக்காமல் மாணவர்களுக்கு எந்த மாதிரியான தேர்வு முறைகளை கொடுத்தாலும் அது சரியானதாக இருக்காது. ஏற்கனவே, ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் சூழலில் தற்போது பொதுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதுவுமே தெரியாத மாணவன் எப்படி பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியும். எனவே, பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவித்திருந்தால் அது சரியானதாக இருந்திருக்கும்.

மேலும், தேர்வு விஷயங்களில் சரியான கல்வியாளர்களையும், மனநல ஆலோசகர்களையும் ஒன்றிணைத்து ஒரு குழு அமைத்து மத்திய அரசு முடிவுகளை எடுக்க வேண்டும். அது தான் சரியானதாக இருக்கும். அப்படி அமைக்கும்போது தான் மாணவர்கள் நலன் குறித்து மத்திய அரசு ஆலோசிக்க முடியும். இதேபோல், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சரிசமமான கல்வியை கொடுக்காமல் தேர்வை மட்டும் நடத்துவதை ஏற்றுகொள்ள முடியாது. ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் ஒரு தேர்வாகவே இந்த தேர்வு பார்க்கப்படுகிறது. மாணவர்களின் நலனையும் இது பாதிக்கும். கல்வியை கொடுக்காமல் தேர்வு எழுது என்று சொல்வது நியாயமற்றது. ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் சூழலில் தற்போது பொதுத்தேர்வு அறிவிப்பை  வெளியிட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதுவுமே தெரியாத மாணவன் எப்படி பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியும்.

Tags : election ,Murugaiyan Bakkirasami , The general election may be held after the election: Dr. Murugaiyan Bakkirasami, Educator
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...