இளம்பெண்ணின் அதிரடியால் அதிர்ந்த சோழவரம் பலாத்காரம் செய்ய முயன்ற மாமனை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த முறைப்பெண்: கற்பை காக்க கொன்றதாக போலீசில் சரண்

சென்னை: சோழவரம் அருகேயுள்ள் அல்லிமேடு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.இதனால் அவர் தன் சித்தியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். அதே பகுதியில், வசிக்கும்  அஜித்குமார்(25),  இவரது மாமா. நேற்று முன்தினம் இரவு அந்த இளம்பெண் இயற்கை உபாதையை கழிப்பதற்காக, வீட்டின் அருகில் உள்ள மறைவான பகுதிக்கு சென்றார். அப்போது குடிபோதையில் இருந்த அஜித்குமார் அவரைப்  பின்தொடர்ந்து சென்றார். பின்னர்,இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட அஜித்குமார் அவரைப் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

மேலும், தனது ஆசைக்கு இணங்க மறுத்தால், கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த, அந்த இளம்பெண் அவரிடமிருந்து லாவகமாக கத்தியைப் பிடுங்கி, சரமாரியாக அஜித்குமாரின் கழுத்தில் குத்தினார். இதனால், படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், கத்தியுடன் அந்த இளம்பெண் சோழவரம் காவல் நிலையம் சென்று நடந்த சம்பவத்தைச் சொல்லி சரணடைந்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அஜித்குமாரின் சடலத்தை மீட்டு,பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சோழவரம் பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தனியார் தொண்டு நிறுவனத்தில் சேர்ப்பு

இளம் பெண் தன் தற்காப்பிற்காக, மாமனை கொலை செய்துள்ளார். இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் கீழ், 302வது பிரிவின்படி, கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே, அவரை சிறையில் அடைக்காமல், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் மகளிர் காப்பகத்தில், சோழவரம் போலீசாரால் தங்க வைத்துள்ளனர்.

Related Stories:

>