×

தானியங்கி கேமரா மூலம் ஒரு மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 13,362 வழக்கு பதிவு: 600 பேர் மட்டுமே அபராதம் செலுத்தினர்

சேலம்: சேலம் 5 ரோட்டில் அமைக்கப்பட்ட தானியங்கி கேமரா மூலம், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13,362 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 600 பேர் மட்டுமே அபராதம் செலுத்தியுள்ளனர். இவர்களிடம் வசூலிக்க தனிக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக தானியங்கி கேமரா மூலம், டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் செல்வோரை கண்டுபிடித்து, அபராதம் செலுத்தும் கேமரா, சேலம் 5 ரோட்டில் உள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தில் அமைக்கப்பட்டது. இரண்டடுக்கு பாலத்தின் 4 பகுதியிலும், 16 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

இதன் சர்வர் டெல்லியில் இருக்கிறது. இந்த கேமரா டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் செல்வோரை, வண்டியுடன் புகைப்படம் எடுக்கும். அதே போல காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்வோரையும் படம் பிடித்து, அவரவர் செல்போன் எண்ணுக்கு அபராத விவரத்தை தெரிவிக்கும். அதனை வைத்துக்கொண்டு, வங்கிகளிலும், இன்டர்நெட் மையங்களுக்கும் சென்று அபராத தொகையை செலுத்த வேண்டும். இந்த முறையை கடந்த டிசம்பர் மாதம் 4ம்தேதி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் துவங்கி வைத்தார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13,362 வழக்குகளை தானியங்கி கேமரா பதிவு செய்துள்ளது.

இதில் 600 பேர் மட்டுமே அபராத தொகையை செலுத்தியுள்ளனர். மற்றவர்கள் அபராதம் கட்டுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சேலம் மாநகர கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் சர்வர் மூலமாக, யாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வரும். இதனை வைத்து ஒவ்வொரு வராக செல்போனில் அழைத்து, அபராத தொகையை செலுத்துமாறு கூறுவதற்கு தனி குழுவை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலத்தில் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தானியங்கி கேமரா மூலம் அபராதம் விதிக்கும் முறை கொண்டு வந்தோம்.

ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராத தகவல் செல்போன் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் அபராத தொகையை செலுத்தவில்லை. முழு அளவிலான அபராத தொகையை வசூலிக்கும் வகையில், நடவடிக்கை எடுத்து வருகிறோம். தனிக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் செல்போனில் தொடர்பு கொண்டு அபராத தொகையை செலுத்துமாறு கூறுவார்கள். அதையும் மீறி அபராதம் செலுத்தவில்லை என்றால், வீட்டிற்கு சென்று எச்சரிக்கை விடுப்பார்கள்,’’ என்றனர்.

முடங்கிய ஸ்பாட் பைன் திட்டம்

சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வசதியாக, ஸ்பாட் பைன் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த திட்டமும் செயல்படவில்லை. சேலத்தில் கடந்த ஆண்டு ஸ்பாட் பைன் திட்டத்தில் தில்லுமுல்லு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அபராதத்தொகையை கையில் வாங்க வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்காரணமாக ஸ்பாட்டில் அபராதம் விதிக்கப்பட்டாலும், அந்த தொகையை அவர்கள் வங்கிகளிலோ அல்லது நெட் மூலமாகவோ தான் கட்ட வேண்டும். இதனால் அபராத தொகை முழு அளவில் வசூலிக்க முடியாமல் கடும் திறணலுக்கு ஆளாகியுள்ளனர்.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு 2லட்சத்து 48,739 ஹெல்மெட் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 3,481 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். போலீஸ் சொல்லித்தான் ஹெல்மெட் போடவேண்டும் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்,’ என்றனர்.

Tags : 13,362 cases of not wearing helmets in a month with automatic camera: only 600 fined
× RELATED தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46%...