×

சேலம் ரயில்வே உட்கோட்ட பகுதியில் ஓராண்டில் ரயில் மோதி 179 பேர் பலி: முந்தைய ஆண்டை விட பெருமளவு குறைவு

சேலம்: சேலம் ரயில்வே உட்கோட்ட பகுதியில், ஓராண்டில் ரயில் மோதி 179 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணத்தால் ரயில்கள் இயக்கப்படாத நிலையில், முந்தைய ஆண்டை விட இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.
நாடு முழுவதும் ரயில் மோதி உயிரிழப்போரின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரிய அளவில் நடக்கும் ரயில் விபத்துகள் அறவே தடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆங்காங்கே அஜாக்கிரதையாக தண்டவாளத்தை கடக்கும் போதும், விரக்தியில் தற்கொலை செய்வோராலும் இத்தகைய இறப்பு அதிகரிக்கிறது. தமிழகத்தை பொருத்தளவில், ஆண்டுதோறும் ரயில் மோதி சுமார் 1,500 பேர் உயிரிழக்கின்றனர். இந்த இறப்பை குறைக்க தமிழக ரயில்வே போலீசாரும், ஆர்பிஎப் போலீசாரும் தொடர் விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் தற்கொலை சம்பவங்கள், தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில், 2020ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கின் காரணமாக, ரயில்கள் இயக்கத்தை நிறுத்தி வைத்திருந்ததால், விபத்து உயிரிழப்பு பெருமளவு குறைந்துள்ளது. 3 மாத காலத்திற்கு பயணிகள் ரயில்கள் இயக்கத்தை அடியோடு நிறுத்தி, சரக்கு ரயில்களை மட்டுமே இயக்கினர். இதனால், ஆங்காங்கே ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது நடக்கும் விபத்து உயிரிழப்பு, பாதிக்கு மேல் குறைந்துள்ளது. சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, ஓசூர், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய 5 ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், கடந்த ஓராண்டில் ரயில் மோதி 179 பேர் பலியாகியுள்ளனர்.

இதில், 145 ஆண்களும், 34 பெண்களும் இறந்துள்ளனர். இவர்கள், ரயிலில் இருந்து தவறி விழுந்தும், தண்டவாளத்தை அஜாக்கிரதையாக கடக்கும்போதும், தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்தும் இறந்துள்ளனர். இறந்தவர்களில் 108 ஆண்கள், 27 பெண்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் உடல்களை உறவினர்களிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்துள்ளனர். 37 ஆண்கள், 7 பெண்களின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இதுவே முந்தைய ஆண்டாக 2019ல், சேலம் உட்கோட்டத்தில் ரயில் மோதி 419 பேர் பலியாகியுள்ளனர். இதில், 343 ஆண்களும், 76 பெண்களும் உயிரிழந்துள்ளனர். 266 ஆண், 65 பெண் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. 77 ஆண், 11 பெண் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.

கொரோனா ஊரடங்கால் அதிக ரயில்கள் இயங்காததும், ரயில்வே போலீசாரின் தொடர்ந்து விழிப்புணர்வு  மேற்கொண்டதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. அதாவது 2019ம் ஆண்டில் இருந்து 2020ம் ஆண்டில் 240 உயிரிழப்பு குறைந்துள்ளது. இதுபற்றி ரயில்வே டிஎஸ்பி பாபு கூறுகையில், ‘‘சேலம் உட்கோட்டம் முழுவதும், ரயில் விபத்து உயிரிழப்புகளை தவிர்க்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குறிப்பாக தண்டவாளத்தை ஒட்டியுள்ள கிராமங்களில், தண்டவாள பகுதியை கழிவறையாக பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கிறோம். இதனால் கடந்த ஆண்டு ரயில் விபத்து உயிரிழப்பு 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. நடப்பாண்டிலும் ரயில் விபத்து உயிரிழப்பை தடுக்க தொடர் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.

Tags : train collision ,Salem , 179 killed in Salem train collision in one year: Greater than last year
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...