×

மந்தமான பாதாள சாக்கடை பணிகளால் பரிதவித்து நிற்கும் சேலம் மாநகர மக்கள்

* தொடரும் விபத்து அபாயங்கள்
* தேங்கும் நீரால் பரவும் நோய்கள்

சேலம்: சேலம் மாநகராட்சியில் ₹149.39 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க, கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டது. டெண்டர் உள்ளிட்ட நடைமுறைகளை தொடர்ந்து, 2009ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கின. மாநகராட்சி பகுதியில் 421.67 கிலோ மீட்டர் நீளத்துக்கு கழிவு நீர் குழாய் பதித்து, அதற்கான ஆள் இறங்கும் தொட்டி மற்றும் வீட்டிணைப்பு வழங்குதல் ஆகியவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. அதில், ஒன்று மற்றும் மூன்றாவது பிரிவு பணிகளை ஒரு தனியார் நிறுவனமும், இரண்டாம் பிரிவு பணிகளை மற்றொரு தனியார் நிறுவனமும் மேற்கொண்டன.

 நீண்ட நாட்களாக பணி செய்யாமல் இருந்ததாக 2013ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி, ஒன்று மற்றும் மூன்றாவது நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீதமிருந்த பணிகளுக்கு மீண்டும் டெண்டர் விடப்பட்டு, புதிய நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அந்த நிறுவனம் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை செய்து வந்தாலும், மணல் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், பணிகளில் ஆர்வம் காட்டாமல் உள்ளது. பெயரளவில் மட்டுமே ஆங்காங்கே பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இப்பணிகளுக்காக சேலம் மாநகராட்சியின் பெரும்பாலான சாலைகள் சிதைக்கப்பட்டன. தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூடாமல், அப்படியே விட்டுச்சென்றுள்ளதால் மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

 மாநகராட்சியில், முதலில் இருந்தே தொடர்ச்சியாக ஒவ்வொரு பகுதியாக நிறைவடையும் வகையில், பணி நடைபெறவில்லை. உதாரணமாக, பிரதான குழாய்கள் அமைத்து பல ஆண்டுகளோ, பல மாதங்களோ கழித்து, மீண்டும் வீட்டு இணைப்புக்காக பள்ளம் தேண்டினர். அதே போல், பாறைகள் உள்ள இடங்களையும், சிறு பாலங்களையும் இணைக்க வேண்டிய இடங்களையும் கிடப்பில் போட்டு விட்டு, வேறு இடங்களில் பணிகளை தொடந்தனர். இதனால் ஒரு பகுதியில் கூட முழுமையாக பணி முடிவடையவில்லை.

பணிகளை ஒவ்வொரு பகுதியாக முழுமையாக செய்து முடிக்கும் வகையில், கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, மாநகராட்சி பொறியாளர் பிரிவுக்கு உள்ளது. ஒரு வார்டில் உள்ள அனைத்து பணிகளையும் முடித்து, இணைப்புகளை முழுமைப்படுத்திய பின்னரே, அடுத்த வார்டு பணிகளை அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், இதை கண்டு கொள்ளாமல் விட்டதால், 300 கிலோ மீட்டர் நீளத்துக்கு, குழாய் பதிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை இணைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாத சூழல் நிலவுகிறது.

இருப்பினும், வெள்ளக்குட்டை ஓடை பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, அம்மாப்பேட்டை மண்டலத்தில் உள்ள 6 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் பணி முடிவடைந்து, மக்களிடையே இணைப்புக்கான கட்டண வசூல் தொடங்கியது. இந்த கட்டணம் சொத்து வரியில் சேர்க்கப்பட்டு, தவணை முறைகளில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 6 ஆயிரம் வீடுகளுக்கான இணைப்புகள் வழங்கப்பட்டால் தான், சுத்திகரிப்பு நிலையம் செயல்பட முடியும். இத்திட்டத்தை முழுமையாக ஒருபகுதியில் செயல்படுத்தியிருந்தால், மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்க முடியும்.

இதனிடையே, மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த சாலைகளை சீரமைக்க, ₹150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாதாள சாக்கடை முடிந்த பகுதிகளில், சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால், சாலைகள் அமைக்கப்பட்ட இடங்களில், மீண்டும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால், இந்த பணிகள் முழுமையடைந்து செயல்பாட்டு வர இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

முழுவீச்சில் பணி நடந்து வருகிறது
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் அம்மாப்பேட்டையில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அஸ்தம்பட்டி, சூரமங்கலம் மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, பாதாள சாக்கடை குழாய் கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் இங்கும் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி நடைபெறும்,’’ என்றனர்.

முடியாத சாலைகள்
போக்குவரத்து ஆர்வலர் மாஷ்லேமுருகன் கூறுகையில், ‘‘பாதாள சாக்கடை திட்டம், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம். அதற்கு பிறகு 2முறை அதிமுக ஆட்சி அமைத்தும், இதுவரை நிறைவு பெறவில்லை என்பது பெரும் அதிருப்தியாக உள்ளது. ஏறக்குறைய 13ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடியாமல் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மாநகரின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்லும் ஒவ்வொருவரும் சிதிலமடைந்த, மேடுபள்ளமான சாலையை கடக்காமல் செல்ல முடியாது.

நோயாளிகளையும், கர்ப்பிணி பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துச் செல்வதற்கு தகுதியற்ற நிலையில் மாநகர சாலைகள், பலஆண்டுகளாக கிடக்கிறது. இதற்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மந்தமாக நடப்பதே காரணம். இதனால் மக்கள் ஏதாவது ஒரு வகையில் துன்பத்தை சந்தித்தே தீரவேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

துரிதமாக முடித்தால் சிரமங்கள் குறையும்
தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் சேலம் மாவட்டத்தலைவர் பெரியசாமி கூறுகையில், ‘‘பாதாள சாக்கடை திட்டம் நல்ல திட்டம் தான். ஆனால், இந்த திட்டத்தை உரிய நேரத்தில் முடிக்காமல் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடித்துக்  கொண்டே இருப்பது, பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு இடத்தில் குழாய் அமைக்க  குழி தோண்டினால், மாதக்கணக்கில் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் நடந்து வருகிறது. குழாய் பதிக்க சாலையை தோண்டினால், உடனடியாக தார்சாலை அமைக்க வேண்டும். இனியும் காலம் தாழ்த்தாமல் இப்பணியை துரிதப்படுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இதுவே தொடரும் சிரமத்திற்கு தீர்வாக அமையும்,’’ என்றார்.

தொலைநோக்கு பார்வை அவசியம்  
சமூக ஆர்வலர் தனசேகரன் கூறுகையில், ‘‘கடந்த 2006ல் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள், கிட்டத்தட்ட 15ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. ஆட்சி மாறியதால் மறுடெண்டர் விடப்பட்டாலும், பத்து ஆண்டுகளாக மந்தகதியில் பணிகள் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் ஓட்டுக்காக, அவசர கதியில் சில குழிகளை மூடி சாலைகளை சீரமைத்தனர். ஆனால், அவை யாவும் தற்போது உடைந்து கிடக்கிறது. அடுத்து சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால் மீண்டும் அவசரமாக குழிகளை மூடி சாலை போடுவார்கள்.

இப்படி அவசரக்கோலத்தில் பணிகளை செய்வதால், அரசியல் கட்சிகளுக்கு கமிஷன் கிடைக்கும். ஆனால், மக்களுக்கு மீண்டும் சிரமமே தொடரும். எனவே, கழிவுநீர் சென்று சேரும் இடம், அதற்கான மறுசுழற்சி, போதிய கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தொலைநோக்குடன் துரித கதியில் முடிக்க வேண்டும்,’’ என்றார்.

Tags : Salem , Dull, underground sewer, by works, standing Salem metropolitan people
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!