×

நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் உள்ள சுப்பையார் குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

நாகர்கோவில்: நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் உள்ள சுப்பையார் குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் கடந்த காலங்களில் இருந்தது. தற்போது ஆக்ரமிப்பின் பிடியால் குளத்தின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் பெரிய குளங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது பஸ் நிலையங்கள், விளையாட்டு மைதானம் என மாறியுள்ளது. மேலும் பல குளங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி கட்டிடங்களாகவும் மாறியுள்ளது. இதனால் மாநகர பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.

தற்போது மாநகர பகுதியில் ஒரு சில குளங்களே மிஞ்சியுள்ளன. அந்த குளங்களையும் போதிய அளவில் பராமரிக்காமல் மண், புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மெல்ல மெல்ல குளங்கள் அழியும் நிலை ஏற்பட்டு வருகிறது.  நாகர்கோவில் புதுகுடியிருப்பில் சுப்பையார் குளம் உள்ளது. இந்த குளம் சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளத்தில் கடந்த சில வருடத்திற்கு முன்பு வரை புதுக்குடியிருப்பு, கிருஷ்ணன்கோவில், அருந்ததியர்தெரு, காமராஜர்புரம், மரச்சினிவிளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் குளித்து வந்தனர். பின்னர் இந்த குளத்தில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கழிவுநீர் பாய்ந்ததால், பொதுமக்கள் குளத்தை பயன்படுத்துவது குறைய தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக இந்த குளம் புதர் மண்டி கிடைந்தது.

 பின்னர் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதில் குளத்தில் மண்டி கிடந்த புதர்கள் அகற்றப்பட்டு, குளத்தை சுற்றி சுற்றுசுவர் அமைத்து, குப்பைகள் கொட்டாதவகையில் சுற்றி கம்பிவேலி அமைக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் தொடர்ந்து அந்த குளத்தை பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்காததால், குளத்தில் குப்பைகள் குவிய தொடங்கியது.

 மேலும் குளத்தில் புதர் மற்றும் பாசிகள் படரதொடங்கியுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த திமுக மாநகர துணைசெயலாளர் வேல்முருகன் கூறியதாவது: சுப்பையார் குளத்தில் 4, 27, 28, 29 ஆகிய வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குளித்து வந்தனர். சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் ஒதுக்கினார். அந்த நிதியில் குளம் சரிசெய்யப்பட்டது. ஆனால் பொதுப்பணித்துறை, மாநகராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்காததால் தற்போது மீண்டும் குளம் பழைய நிலைக்கு மாறி வருகிறது. முன்பு குளத்தில் கழிவுநீர் வந்து பாய்ந்தது. கழிவுநீர் வராமல் தடுக்கப்பட்டு தற்போது, கிருஷ்ணன்கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட நீர் தற்போது குளத்திற்கு வருகிறது.

இந்த குளத்தை பொதுப்பணித்துறை, மாநகராட்சி நிர்வாகம் தூர்வாரி பொதுமக்கள் குளிக்கும் அளவிற்கு செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் மாநகராட்சி நிர்வாகம் வழங்கும் குடிநீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்தி விட்டு, குளிப்பதற்கு இந்த குளத்தை மக்கள் பயன்படுத்துவார்கள். இதனால் தண்ணீர் செலவு அதிக அளவு மிச்சமாகும். என்றார்.

சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ மனு
குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பில் உள்ளது சுப்பையார்குளம். இந்த குளத்தை தூர்வாராமல் குப்பைகளும், ஆகாய தாமரைகளும் படர்ந்து பொதுமக்களுக்கு உபயோகமற்ற நிலையில் கொசுக்களின் உற்பத்தி கூடமாக இருந்து வருகிறது.

இதனை சுத்தப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறையிடமும் கடந்த 4 ஆண்டு காலமாக மனுக்கள் கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளத்தை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. எனவே குளத்தை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

Tags : Subbaiyar Pond ,Nagercoil ,Pudukudiyiruppu , Nagercoil, Pudukudiyiruppil, Subbaiyar pond, for use, Varuma
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை