×

ஆந்திராவிற்கு வேலைக்கு சென்ற கணவன் சாவில் சந்தேகம் முதலாளி வீட்டின் முன் சடலத்தை வைத்து மனைவி, குழந்தைகள் போராட்டம்: திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர்:  ஆந்திராவிற்கு வேலைக்கு சென்ற கணவன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி முதலாளி வீட்டின் முன் சடலத்தை வைத்து மனைவி, குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அடுத்த திம்னாமுத்தூர் அருகே உள்ள குஸ்தம்பள்ளி‌ கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(51). இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் வெங்கடேசனை அருகே உள்ள திம்மனாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் டிசம்பர் மாதம் 14ம் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் அவர் நடத்திவரும் துணிக்கடைக்கு வேலைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற உடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெங்கடேசனுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் நான் ஊருக்கு செல்கிறேன் என்று தனது முதலாளி புருஷோத்தமனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர் பொங்கல் நேரத்தில் வேலையை விட்டு நீ சென்று விட்டால் யார் இங்கு பணியை பார்ப்பது என்று அவரை ஊருக்கு அனுப்ப மறுத்து உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அவரது மனைவி அஞ்சலி கணவனுக்கு போன் செய்யும்போது தன்னை புருஷோத்தமன் இங்கிருந்து அனுப்ப மாட்டேன் என்று கூறுகிறார். எனக்கு உடல்நலம் மிகவும் கஷ்டமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அஞ்சலி புருஷோத்தமனிடம் போன் செய்து உடல்நிலை பாதித்த தனது கணவனை ஊருக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து கடையில் உள்ள ஊழியர்களால் வெங்கடேசன் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் பயந்துபோன வெங்கடேசன் கடையில் இருந்து வெளியேறி  நெல்லூர் பகுதிக்குச் சென்று உள்ளார். அங்கு சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் பார்த்து பாக்கெட்டில் இருந்த தொலைபேசி எண்களை வைத்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரது மனைவி அஞ்சலி நேற்று நெல்லூர் பகுதிக்கு சென்று கணவன் வெங்கடேசனை அழைத்து வந்தார். அப்போது உடல் முழுவதும் அடித்த காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து காரில் வீட்டிற்கு நேற்று மாலை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது மனைவி, புருஷோத்தமனிடம் தனது கணவனை நீங்கள் ஏன் இப்படி சித்ரவதை செய்தீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு புருஷோத்தமன் உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் குடும்பத்தினர் நேற்று மாலை திம்னாமுத்தூர் கிராமத்தில் உள்ள புருஷோத்தமன் வீட்டின் முன்பு வெங்கடேசன் சடலத்தை வைத்து அவரது மனைவி அஞ்சலி மற்றும் குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வெங்கடேசன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது உடல்நிலை பாதித்து இறந்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : death ,children ,employer ,Andhra Pradesh Wife ,house , Andhra, work, husband's death, boss's house, corpse struggle
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...