×

ஆரணி அருகே சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு கோரிக்கை

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியம், 5புத்தூர் ஊராட்சி சோமந்தாங்கல் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் யாராவது இறந்துவிட்டால், சடலத்தை 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக சடலத்தை எடுத்து செல்லும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்து தரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த லட்சுமியம்மாள்(97) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உறவினர்கள், அங்குள்ள விவசாய நிலம் வழியாகவும், சேறும் சகதியுமான பாதையிலும் சடலத்தை சுமந்து சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த 70 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு சடலம் எடுத்து செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் சேறும், சகதியுமான விவசாய நிலங்கள் வழியாக சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. அப்போது, பயிர்கள் சேதமடைவதால் உரிமையாளர்கள் சடலத்தை  கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.எனவே, சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, ஒவ்வொரு முறையும் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தும், கண்டும் காணாமல் இருந்து பதவி முடிந்து செல்கின்றனர். இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : crematorium ,field ,district administration ,Arani , Arani, crematorium, corpse, disgrace, district administration
× RELATED மாரநேரி கிராமத்தில் உழவர் வயல் தினவிழா