அணு உலையில் 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மிக விரைவில் தொடங்க இருப்பதாக ஈரான் அறிவிப்பு..!

டெஹ்ரான்: போர்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மிக விரைவில் தொடங்க இருப்பதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது. அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்தபோது 2015–ம் ஆண்டு, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்து கொண்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தி எரிபொருளாக பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குறிப்பிட்ட அளவே ஈரான் கையிருப்பு வைத்திருக்க வேண்டும், அணுசக்தி மையங்களில் யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டக் கூடாது என்பவை முக்கிய விதிகள் ஆகும்.

மேலும், இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என கூறிய டிரம்ப், கடந்த 2018–ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக்கொண்டார்.  மேலும் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் கடும் மோதல் நிலவி வருகிறது.

இதனையடுத்து, அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்ட 3.67 சதவீத அளவைத்தாண்டி, 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா ஈரான் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் போர்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மிக விரைவில் தொடங்க இருப்பதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை கண்காணித்து வரும் சர்வதேச அணுசக்தி நிறுவனமும் இதனை தெரிவித்துள்ளது.

Related Stories:

>