×

புத்தாண்டில் விதவிதமான உணவை ருசித்த மக்கள் : ஒரு நிமிடத்துக்கு 4,254 ஆர்டர்கள் திணறிய சொமோட்டோ, ஸ்விக்கி

புதுடெல்லி: முன்பு எப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு புத்தாண்டு தினத்தில் மக்கள் நிமிடத்துக்கு 4,254 ஆர்டர்களை குவித்ததால் சொமோட்டோ, ஸ்விக்கி போன்றவை திணறியுள்ளன.  கடந்தாண்டு மார்ச்சில் தொடங்கிய கொரோனா அச்சம் இப்போதும் தொடர்கிறது. தற்போது, இங்கிலாந்தில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், மக்கள் மேலும் அச்சம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக, இந்தாண்டு பொது இடங்கள், ஓட்டல்கள், கிளப்புகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. எனவே, வழக்கத்துக்கு மாறாக தங்கள் வீடுகளில் இருந்தபடியே மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக அவர்களுக்கு உதவியாக இருந்தவை ஆன்லைன் உணவு சேவை மையங்கள்தான். மக்கள் வீட்டில் இருந்தபடியே விருப்பமான உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்தனர். இதனால், சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் அதிக உணவு டெலிவரி ஆர்டர்களை பெற்றுள்ளன. புத்தாண்டு தொடங்குவதற்கு முதல் நாளான வியாழக்கிழமை மாலை, இவற்றுக்கு நிமிடத்துக்கு 3,200 ஆர்டர்கள் வந்துள்ளன.

சொமோட்டோ நிறுவனத்தின் சிஇஒ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எங்கள்து நிறுவனத்தில் இவ்வளவு காலத்தில் முதன் முதலாக குவிந்த அதிகப்பட்ச உணவு டெலிவரி ஆர்டர்கள் இதுதான். மாலை 6 நிலவரப்படி சராசரியாக நிமிடத்துக்கு 2500 ஆர்டர்கள் வந்தன. 45 நிமிடங்களுக்கு பிறகு நிமிடத்துக்கு இது 4,254 ஆக அதிகரித்தது,’ என கூறியுள்ளார்.  டிசம்பர் 31ம் தேதி இரவு மட்டும், இந்த நிறுவனத்தால் ஒரு லட்சம்  ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ₹70 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.  ஸ்விக்கி செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘கடந்தாண்டை விட இந்த புத்தாண்டில் ஆர்டர்கள் இரட்டிப்பாக இருந்தது,” என்றார். ‘லைட் பைட் புட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆன்லைன் மூலமான டெலிவரி ஆர்டர்கள் கடந்த புத்தாண்டை காட்டிலும் 50 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.


Tags : Somoto ,Zwicky , People tasting a variety of food in the New Year: 4,254 orders per minute Somoto, Zwicky
× RELATED சென்னையில் ஆன்லைன் வேலை வாய்ப்பு...