திருப்பதியில் நடைபெறும் 10 நாள் சொர்க்க வாசல் தரிசனம் இன்று நிறைவு

திருமலை: திருப்பதியில் நடைபெற்று வரும் 10 நாள் சொர்க்க வாசல்  தரிசனம் இன்றுடன் முடிகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. வழக்கமாக, வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி என 2 நாட்கள் மட்டும்தான் சொர்க்க வாசல் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு முதல் முறையாக தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, 9வது நாளான நேற்றும் ஏராளமான பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் 36,057 பக்தர்கள் இவ்வாறு தரிசனம் செய்தனர். 7 ஆயிரத்து 164 பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில்,2.64 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்நிலையில், சொர்க்க வாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்கும் நடைமுறை இன்றுடன் முடிகிறது.

நுழைவு வாயில், பலிபீடத்துக்கு 3.13 கோடி செலவில் தங்க தகடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள ராஜகோபுரம் நுழைவு வாயில், கொடிமரம் மற்றும் பலிபீடத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தங்க தகடுகள் பதிக்கப்பட்டது. இவைகள் தற்போது பாதிக்கப்பட்டு, பொலிவு இழந்து காணப்படுகின்றன. இதனால், 6.625 கிலோ எடையில் இவற்றுக்கு புதிய தங்க தகடுகளை பதிக்க, 3.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 68 கிலோ செம்புடன் சேர்த்து தகடுகள் தயார் செய்யும் பணிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இன்னும் 2 மாதத்தில் இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

* கடந்த 1958ல் மூலவர் குடியிருக்கும் கருவறைக்கு மேலுள்ள ஆனந்த நிலையத்துக்கு, 12 டன் செம்பு, 120 கிலோ தங்கத்தில் தகடுகள் பதிக்கப்பட்டது.

* கடந்த 2007ம் ஆண்டு மணி மண்டபம், கோயிலில் உள்ள 16 கதவுகளுக்கும், 2013ம் ஆண்டு மீதமுள்ள 18  கதவுகளுக்கும் தங்க தகடுகள் பதிக்கப்பட்டது.

Related Stories:

>