புதுமை, ஒருமைப்பாடு, ஒருங்கிணைத்தல் தற்சார்பு இந்தியா இலக்கை அடைய உதவும் 3 வழிகள்: பிரதமர் மோடி பேச்சு

சம்பல்பூர்: புதுமை, ஒருமைப்பாடு, ஒருங்கிணைத்தல் ஆகியவையே தற்சார்பு இந்தியாவுக்கான இலக்கினை அடையும் முக்கிய வழிகளாகும்,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம், சம்பல்பூர் பகுதியில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு (ஐஐஎம்) அமைக்கப்பட உள்ள நிரந்தர கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தற்சார்பு இந்தியாவிற்கான இலக்கினை அடைய புதுமை, ஒருமைப்பாடு, ஒன்றிணைத்தல் ஆகியவையே முக்கிய வழிகளாக உள்ளது. தொழில்நுட்பத்தினால் பிராந்தியங்களுக்கு இடையிலான தூரம் வெகுவாக குறைந்துள்ளது. உலகளவில் நிலவும் போட்டியினை சமாளிக்க, டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா விரைவான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மனித மேலாண்மை போன்று தொழில்நுட்ப மேலாண்மையும் முக்கியமானதாகும். கொரோனா தொற்று காலம் உள்பட கடந்த சில ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டு இந்தியா இத்துறையில் தாக்குப் பிடித்துள்ளது.

ஒருங்கிணைந்த வளர்ச்சியில் பின்தங்கி உள்ளவர்களை இளைய தலைமுறையினர் வழிநடத்தி செல்ல வேண்டும். புதிய மேலாண்மை திட்டங்கள், தொழில்நுட்பங்களினால் உள்ளூர் தயாரிப்புகளை உலக சந்தைக்கு கொண்டு செல்ல முடியும்.

இந்தியாவின் இன்றைய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களே நாளைய சர்வதேச நிறுவனங்களாகும். இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியை தங்களது வாழ்வின் இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். 2014ம் ஆண்டு வரை நாட்டில் 13 ஐஐஎம்.களே இருந்தன. ஆனால், இன்று 20 ஐஐஎம்.கள் உள்ளன. இது போன்ற திறன்மிக்க கல்வி நிறுவனங்கள், தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன. விவசாயம் முதல் விண்வெளி ஆய்வு வரை சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் நாட்டில் தற்போது அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

உலகளவில் அதிக மக்களின் அங்கீகாரம் பெற்று சாதனை

அமெரிக்க நிறுவனமான, ‘மார்னிங் கன்சல்ட்’ நடத்திய ஆய்வில், உலகத் தலைவர்களிடையே இந்திய பிரதமர் மோடிக்கு மக்களிடம் 75 சதவீத அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் 20 சதவீதம் பேர் அவரை நிராகரித்திருப்பதால், அவரது மக்கள் செல்வாக்கு சராசரியாக 55 சதவீமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது வேறு எந்த தலைவர்களுக்கும் இல்லாத அளவு அதிகளவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜ தலைவர் நட்டா தனது டிவிட்டரில், `நாட்டிற்காக மோடி செய்துள்ள அர்ப்பணிப்புக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வேறுபாடின்றி அங்கீகாரம் அளித்துள்ளனர். இது பிரதமர் மோடியின் திறமையான தலைமைக்கு கிடைத்த சான்றாகும். இதற்காக, இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

More