டிஜிபியிடம் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு திமுகவினர் மீது பொய் வழக்கு போடும் போலீசார் மீது நடவடிக்கை வேண்டும்

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கோவை  தொண்டாமுத்தூர் தேவராயபுரத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில், குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் செய்த ஊழல்களையும், பல்வேறு விவகாரங்களில் அதிமுக அரசின் தோல்விகளையும் பற்றி பேசினார். அந்த தொகுதியின் எம்எல்ஏவான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருகிற தேர்தலில் தோல்வியை தழுவிவிடுவோம் என்று கருதி, திமுக பிரசாரம் செய்வதையும், திமுக தலைவர்கள் தொண்டர்கள், மக்களுடன் கலந்துரையாடுவதையும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மற்றும் கோவை மாவட்ட அதிமுகவினரின் உதவியோடு மக்கள் கிராம சபை கூட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்காக எஸ்.பி.வேலுமணி சதி திட்டம் தீட்டினார். அதிமுக மகளிரணி துணை தலைவர் பூங்கொடியை இந்த திட்டத்துக்காக அவர் பயன்படுத்தினார். அந்த பெண் எவ்வளவோ முயன்றும் வன்முறையை ஏற்படுத்த முடியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கூட்டத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த பெண் திமுகவினர் தன்னை தாக்கியதாக பொய் சொல்கிறார். பூங்கொடி கொடுத்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்காமல் தொண்டாமுத்தூர் போலீசார் திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சதித்திட்டத்தை சமூக வலைத்தளங்களில் பரவிய எஸ்.பி.வேலுமணி மற்றும் பூங்கொடி உரையாடல் மூலம் அறியலாம்.

இதன்படி, எஸ்.பி.வேலுமணி, பூங்கொடி, வேலுசாமி மற்றும் தொண்டாமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தண்டனைக்குரிய குற்றங்களை செய்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு, எஸ்.பி.வேலுமணியின் தூண்டுதலால் திமுகவினர் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>