×

உள்நாடு, சர்வதேச முனையங்களை இணைக்க 2,467 கோடியில் முனையம் அமைக்கும் பணி தீவிரம்: விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: மீனம்பாக்கத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களை இணைக்கும் வகையில் புதிய முனையத்தை 2,467 கோடியில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தையும், சர்வதேச  முனையத்தையும் இணைக்கும் வகையில், புதிய முனையம் கட்டும் பணி நடந்து வருகிறது. உள்நாட்டு முனையம், சர்வதேச முனையத்தை இணைத்து புதிய முனையம் உருவாக்குவது மட்டுமின்றி, அடுக்குமாடி மல்டிலெவல்  கார் பார்க்கிங், ஷாப்பிங் மால்கள்,  கலையரங்கங்கள், நவீன வசதிகளுடன் விவிஐபி மற்றும் பயணியர் ஓய்வு விடுதி போன்றவைகளும் உள்ளடக்கியது. இதற்காக 2 ஆயிரத்து 467  கோடியை இந்திய விமானநிலைய ஆணையம் ஒதுக்கியுள்ளது. 2018ம் ஆண்டு  தொடங்கிய பணிகள் கொரோனா வைரஸ் பீதி, ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. எனினும் வெளிமாநில பணியாளர்களில் ஒரு பகுதியினர் அதிகாரிகள் அளித்த உறுதி காரணமாக திரிசூலத்தில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்த பின்பு  கடந்த ஜூன் மாதத்திலிருந்து  குறைந்த அளவு தொழிலாளர்களுடன் கட்டுமான பணி தொடங்கியது. இந்த முதல் கட்ட பணிகள் 2020ம் ஆண்டு செப்டம்பரில் முடிந்து இருக்க வேண்டும். கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளால் தாமதம் ஏற்பட்டது. எனவே 2021ம் ஆண்டு செப்டம்பரில் தான் பணிகள் முடியும். மேலும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இரண்டாம் கட்ட பணிகள் 2022ம் ஆண்டு தான் முடியும் என்று கூறப்படுகிறது. இப்பணிகள் 2018ம் ஆண்டு தொடங்கியபோது, இப்பணிகளுக்கு ஒட்டுமொத்தமாக ₹2 ஆயிரத்து 467 கோடியை இந்திய விமானநிலைய ஆணையம் ஒதுக்கியது. அதோடு 2020 செப்டம்பருக்குள் முதல் பேஸ்சும், 2ம் பேஸ் அடுத்த 6 மாதங்களிலும் முடிக்க வேண்டும். ஆனால், தற்போது பணிகள் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் இப்பணிகளுக்கான திட்ட மதிப்பு செலவும் சுமாா் ₹3 ஆயிரம் கோடி வரை அதிகரிக்க  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சென்னை விமானநிலையத்தில் இந்திய விமானநிலைய ஆணையம், விமான நிலைய உயரதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில் 2ம் பேஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து நடத்துவது பற்றி ஆலோசணை நடத்தப்பட்டது. இதையடுத்து கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  இதனால் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய சென்னை விமானநிலையம் முழுமையாக  செயல்பாட்டிற்கு வருவதற்கு பயணிகள் 2022  ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் என்ன இருக்கும்?
விமான நிலைய புதிய முனையத்தின் முதல் பேஸ், ஒரு லட்சத்து 97 ஆயிரம் சதுர மீட்டரில் அமைக்கப்பட உள்ளது. அதில் 108 குடியுரிமை (இம்மிகிரேஷன்) கவுன்டர்கள், கூடுதலாக கஸ்டம்ஸ் சோதனை அறைகள், பேக்கேஜ் மற்றும் எக்ஸ்ரே ஸ்கேனர்கள், கூடுதலாக 15 ஏரோ பிரிட்ஜ்கள், கூடுதலாக விமானங்கள் நிறுத்தும் இடங்கள் அமைகின்றன.

ஒரே குடையின் கீழ் எல்லாம் கிடைக்கும்
விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தில் ஒரே  நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை நிறுத்தும் மல்டிலெவல் கார் பார்க்கிங், சர்வதேச, உள்நாட்டு முனையங்களுக்கான ஒருங்கிணைந்த டெர்மினல், ஷாப்பிங் மால்கள், பொழுது போக்கு கூடங்கள் இருக்கும்.

Tags : terminal ,Airport , 2,467 crore to set up terminals to connect domestic and international terminals: Airport officials advise
× RELATED கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு...