தென் ஆப்ரிக்கா- இலங்கை பலப்பரீட்சை

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ், 45 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் இந்த 2 அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்ட டு பிளெஸ்ஸி, 5ரன்னில் சதத்தை தவறவிட்ட டீன் எல்கர், அரை சதம் விளாசிய மார்க்ரம், தெம்பா பவுமா, கேசவ் மகராஜ் ஆகியோர் மட்டுமல்ல பந்துவீச்சிலும் லுதோ சிபம்லா, வியான் மல்டெர், லுங்கி என்ஜிடி, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரும் அசத்தினர். அதனால் தொடரை வெல்லும் முனைப்புடன் தென் ஆப்ரிக்கா களம் காண்கிறது. அதே சமயம் தொடரை சமன் செய்ய திமத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் வரிந்துகட்டுகிறது. முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இருந்த வேகம் இலங்கையிடம் 2வது இன்னிங்சில் காணாமல் போய்விட்டது.

தினேஷ் சண்டிமால், தனஞ்ஜெயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, தசுன் ஷனகா, குசால் பெரேரா, வனிந்து ஹசரங்கா 2 இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினால், தென் ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கலாம். கூடவே இலங்கை பந்துவீச்சிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே இலங்கை அணியால் தொடரை சமன் செய்ய முடியும். இல்லாவிட்டால் நீண்ட நாட்களுக்கு பிறகு தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றலாம். கடந்த 2018ல் இலங்கையிடம் டெஸ்ட் தொடரை இழந்த அந்த அணி, அதன் பிறகு தொடர்ந்து இந்தியா, இங்கிலாந்து நாடுகளிடமும் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>