நியூசிலாந்து - பாகிஸ்தான் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச், ஹேக்லி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30க்கு தொடங்கி நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 2 போட்டிகள் கொண்ட டி20, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நியூசிலாந்து, மவுன்ட் மவுங்கானுயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 101 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. முதல் டெஸ்டில் அபாரமாக வென்ற உற்சாகத்துடன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசி. அணி களம் காண்கிறது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்த நியூசி. அணி, இந்த முறை பாகிஸ்தானுக்கு எதிராகவும் தொடரை முழுமையாகக் கைப்பற்றும் மும்முரத்தில் இருக்கிறது.

அதுமட்டுமல்ல ஐசிசி உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் நியூசி. உள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை உருவாக்க 2வது இடத்துக்கு முன்னேற வேண்டும். அதற்கு தொடர் வெற்றிகள் அவசியம். அதனால் நியூசி. இந்த டெஸ்ட்டிலும் வேகம் காட்டும். வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், வாட்லிங், கைல் ஜேமிசன், டிம் சவுத்தீ என எல்லாரும் சிறப்பாக விளையாடுகின்றனர். அதே நேரத்தில் முதல் டெஸ்ட்டில் பாக். தோற்றிருந்தாலும், நியூசி.க்கு அந்த வெற்றி எளிதில் கிடைத்து விடவில்லை. ஒரே சமயத்தில் தொடங்கிய 3 பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா, இந்திய அணிகள் 4வது நாளிலேயே  வெற்றியை வசப்படுத்திய நிலையில், நியூசிலாந்து அணியால் கடைசி நாளில்தான் வெற்றியை வசப்படுத்த முடிந்தது. அந்தளவுக்கு பாக். வீரர்கள் கடுமையாகப் போராடினர்.  குறிப்பாக, கேப்டன் முகமது ரிஸ்வான் 2 இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். பவாத் ஆலம், பாஹிம் அஷ்ரப் ஆகியோரும் அசத்தலாக விளையாடுகின்றனர். பந்துவீச்சிலும் ஷாகீன் அப்ரிடி, முகமது அப்பாஸ், பாஹிம் அஷ்ரப் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். அதனால் இன்றைய முதல் நாள் ஆட்டமே ‘யார் கை ஓங்கும்’ என்பதை பளிச்சென சொல்லிவிடும்.

Related Stories:

>