×

‘நிவர்’, ‘புரெவி’ புயல் பாதிப்பு: மானாவாரி பயிர்களுக்கு இடுபொருள் நிவாரண தொகை உயர்வு

சென்னை: தமிழகத்தில் ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனை காக்கும் வகையில், அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்கள் கரையை கடக்கும்போது வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்களின் தாக்கத்தின் காரணமாக பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனை காக்கும் வகையில், விவசாயிகள் அதிக செலவு செய்து, பேரிடரால் பெரும்பாதிப்பு அடைந்துள்ளதை கருத்தில் கொண்டும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி,

* மானாவரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரண தொகையான 13,500 என்பதை, 20,000ஆக உயர்த்தியும்,
* மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரண தொகையான ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 7,410 என்பதை, 10,000 ரூபாயாக உயர்த்தியும்,
* பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரண தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 18,000 என்பதை 25,000 ரூபாயாக உயர்த்தியும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். உயர்த்தப்பட்ட இடுபொருள் நிவாரணத்திற்கான தொகையை, தமிழக அரசு வழங்கும்.

மேலும், தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வழிவகை உள்ளது.
இந்த பேரிடரில், அனைத்து விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள காரணத்தால் 2 ஹெக்டேர் என்ற உச்சவரம்பை தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி அறிவிப்பு மத்திய அரசிடம் கேட்டது 5,274 கோடி
தமிழகத்தில் டிசம்பர் மாதம் 8, 9ம் தேதி ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்தது போல், ‘புரெவி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு கடந்த 28ம் தேதி முதல் 30ம்  தேதி வரை ஆய்வு செய்தது.  
‘நிவர்’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ₹641.83 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க 3108.55  கோடி என மொத்தம் 3,750.38 கோடி தேவைப்படும் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது. மேலும், ‘புரெவி’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க 485  கோடியும், நிரந்தரமாக சீரமைக்க 1,029 கோடி என மொத்தம் 1,514 கோடி தேவைப்படும் என தெரிவித்து மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

7ம் தேதி வங்கி கணக்கில் டெபாசிட்
‘நிவர்’ மற்றும் புரெவி  புயல்களின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான 3,10,589.63 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு, சுமார் 5 லட்சம் விவசாயிகளுக்கு  600 கோடி இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும். இந்த நிவாரணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வருகிற 7ம் தேதி முதல் நேரடியாக வரவு வைக்கப்படும்.


Tags : Nivar , ‘Nivar’, ‘Purevi’ storm damage: Input relief amount for rainfed crops increased
× RELATED நிவர் புயலால் பாதிக்கப்பட்ட...