×

டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை பொறியாளர் பணியிடம் நீக்கம்? பட்டய பொறியாளர் சங்கம் சார்பில் முதல்வருக்கு கடிதம்

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பிஇ படித்த பட்டாரிகள் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கும், இளநிலை பொறியாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் டிப்ளமோ படித்தவர்களை நேரடி நியமன அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்  மூலம் தேர்வு நடைபெறவில்லை. அதே நேரத்தில் சாலை ஆய்வாளர்கள் கல்வி தகுதியின் பேரில் இளநிலை பொறியாளராக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு கடந்த 2019ல் தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தற்போது வரை நேரடி நியமனம் நடைபெறவில்லை.  
இந்த நிலையில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நீக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு நடக்கும் பட்சத்தில் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்க செயலாளர் மாரிமுத்து முதல்வர் எடப்பாடிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அதில், நெடுஞ்சாலைத்துறையில் நுழைவு நிலை பணியிடமாக உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் பணியிடம் இருந்து வருகிறது. இப்பணியிடத்தில் 3:1 என்கிற அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது இளநிலை பொறியாளர் பணியிடத்தில் 300 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், 150 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதம் உள்ள பணியிடத்தில் உதவி பொறியாளர் நிலையில் உள்ளவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே, நெடுஞ்சாலைத்துறையில் 5 வருட பணி அனுபவத்தில் ஏஇ/ஜேஇ அலுவலர்கள் 3:1 என்ற இட ஒதுக்கீட்டு அடிப்படையில் உதவி கோட்ட பொறியாளர்கள் பதவி உயர்வு பெற்று வந்தனர். இந்த நிலையில், உதவ பொறியாளர்கள் கோரிக்கையை ஏற்று இன்று இளநிலை பொறியாளர்களுக்கு மட்டும் 10 வருடம் பணி அனுபவம் இருந்தால் தான் உதவி கோட்ட பொறியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த 2018ல் அரசாணை பெற்றுள்ளனர்.

தற்போது, அடுத்தகட்டமாக இளநிலை பொறியாளர் பணியிடத்தை முழுவதுமாக நெடுஞ்சாலைத்துறையில் எடுத்து விட்டு பொறியியல் நுழைவு நிலை பிரிவு அலுவலர் பணியிடத்தை உதவி பொறியாளர் பணியிடமாக கொண்டு வர உதவி பொறியாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி தலையிட்டு இளநிலை பொறியாளர் பணியிடத்தை பாதுகாக்க வேண்டும். மேலும், முதன்மை இயக்குனர் பணியிடத்தை அனைத்து பணியாளர்கள் நலன் கருதி ஐஏஎஸ் நிலைக்கு தரம் உயர்த்த கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chartered Engineers Association , Diploma in Civil Engineering Students Future Question Dismissal of Bachelor of Engineering in Highways? Letter to the Chief on behalf of the Chartered Engineers Association
× RELATED நெடுஞ்சாலைத்துறையில் பணியிட மாறுதல் வழங்க கோரி அமைச்சருக்கு மனு