கோவையில் நடந்த ஸ்டாலின் கூட்டத்தில் அதிமுக பெண் ரகளை: அமைச்சர் வேலுமணி அனுப்பி வைத்தது அம்பலம்: கலவரம் நடத்த சதி என திமுக குற்றச்சாட்டு

கோவை: கோவையில் மு.க.ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட  அ.தி.மு.க. பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவர், போலீஸ் முன்னிலையில் அமைச்சர் வேலுமணியிடம் செல்போனில் பேசியதையடுத்து அவரை அமைச்சரே அனுப்பியது அம்பலமாகி உள்ளது. திமுக கூட்டத்தில் கலவரம் ஏற்படுத்தி சதி செய்வதாக அதிமுக மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். ‘ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப்போறாரு’, ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 23ம் தேதி முதல் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களை நேரடியாக சந்தித்து குறை கேட்டு வருகிறார். இதனால் கிராம சபை கூட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் திமுக கூட்டம் நடத்தி வருகிறது. அதன்படி நேற்று கோவையில் மக்கள் கிராம சபை கூட்டத்தை அவர் நடத்தினார்.

கோவை   புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  தேவராயபுரம் ஊராட்சி   பரமேஸ்வரன்பாளையம் கொங்கு திருப்பதி கோயில்  மைதானத்தில் மக்கள் கிராம   சபை கூட்டம் நேற்று காலை நடந்தது. மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்   சி.ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார். இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்   கலந்துகொண்டு பேசினார். அவர், துவக்க உரையாற்றிய பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற ஆண்களில் 5 பேர், பெண்களில் 5 பேர் என ஒவ்வொருவராக அந்த பகுதி குறைகளை பற்றி மு.க.ஸ்டாலினிடம் எடுத்து கூறி பேசினர். பிறகு, மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்ற முயன்றார். அப்போது, கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண் திடீரென எழுந்து பேச முயன்றார். அவர் தனது தலையில், கருப்பு-சிவப்பு நிறத்துடன் கூடிய தொப்பியும் வைத்திருந்தார்.   அந்த பெண் பேசுகையில், ‘‘தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு, உள்ளூர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நிறைய பணிகளை செய்துள்ளார். ஆனால், அவர் எதுவுமே செய்யாததுபோல் குற்றம்சாட்டி நீங்கள் பேசுகிறீர்கள்..’’ என மடமடவென பேசினார். மேலும், ஸ்டாலினை பார்த்து ஒரு விரலை நீட்டி ஏதோ மிரட்டும் தொனியில் பேசினார்.

இதைக்கேட்டதும், மு.க.ஸ்டாலின், ‘‘நீங்கள் இந்த ஊராட்சியை சேர்ந்தவரா?’’ என கேட்டார். அதற்கு அந்த பெண், ‘‘இல்லை... நான் பக்கத்து ஊராட்சியை சேர்ந்தவர்’ என்றார். அப்போது அந்த பெண் வேண்டும் என்றே திட்டமிட்டு கூட்டத்தில் பிரச்னை செய்வதற்காகவே அனுப்பப்பட்டவர் என்தாக கூட்டத்தினர் கருதினர். அதேநேரத்தில், மு.க.ஸ்டாலின், ‘‘அப்படியானால், இங்கு பேச அனுமதி இல்லை. உங்கள் ஊரில் கிராம சபை கூட்டம் நடக்கும்போது பேசிக்கொள்ளலாம்’ என்றார். ஆனாலும், அந்த பெண் தொடர்ந்து பேச முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அந்த பெண்ணை சுற்றிலும் தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர். இதை கவனித்த மு.க.ஸ்டாலின், ‘‘அந்த பெண்மணியை பத்திரமாக காவல் துறையினரிடம் ஒப்படைத்து விடுங்கள்’’ என்றார்.

 இதையடுத்து, தி.மு.க. தொண்டர்கள் அந்த பெண்ணை, அரங்கத்தை விட்டு வெளியே அழைத்துச்சென்று, நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணை ஜீப்பில் ஏற்றி, அருகில் உள்ள தொண்டாமுத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பூங்கொடி என்பதும், அ.தி.மு.க. மகளிர் பாசறையில் இணை செயலாளராக இருப்பவர் என்பதும் தெரியவந்தது.

 இதற்கிடையில், இந்த தகவல் அறிந்து, அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் சுமார் 20 பேர் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் குவிந்தனர். அப்போது, அவர்களில் ஒருவரது செல்போனுக்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். இதை அதிமுக பிரமுகரே வீடியோ பதிவு செய்தார். அந்த நபர், போனை ரகளை செய்த பூங்கொடியிடம் கொடுத்தார். அப்போது அந்த பெண் அமைச்சரிடம் விளக்கம் கூறினார். பெண், போலீசார் முன்னிலையிலேயே, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பேசினார். ‘அண்ணா... நான் இந்த பகுதியில் கோயிலுக்கு வந்தேன். கூட்டம் நடந்ததால் அங்கு சென்றேன். உங்களை பற்றி தவறாக பேசினார்கள். ஏன் இப்படி பேசுகிறீர்கள் என கேட்டேன்’ என்றார். இதன்பின்னர், போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து விடுவித்தனர்.

இது ஒருபக்கம் நடக்க, இன்னொரு பக்கம் தி.மு.க.வின் மக்கள் கிராம சபை கூட்டம் வழக்கம்போல் அமைதியாக நடந்துகொண்டிருந்தது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘நாம் நடத்தும் இந்த கூட்டத்திற்குள் அமைச்சர் வேலுமணி, ஆட்களை தயார் செய்து அனுப்பி வைத்துள்ளார். நாம் அந்த பெண்மணியை தாக்குவோம்.  அதை காரணமாக வைத்து இந்த கூட்டத்தை நடத்தவிடாமல் தடை செய்து விடலாம் எனக்கருதி இந்த ஏற்பாட்ைட அமைச்சரே செய்துள்ளார்.

எங்கள் கூட்டத்திற்குள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் புகுந்து கலகம் செய்தாலும், எங்கள் தொண்டர்கள் அந்த பெண்மணியை பத்திரமாக மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுதான் தி.மு.க. எந்த சக்தியாலும் எங்களது கட்டுக்கோப்பை உடைக்க முடியாது. தி.மு.க.  நடத்தும் மக்கள் கிராம சபை  கூட்டத்திற்குள் அ.தி.மு.க.வினரை ஊடுருவ செய்து,  இக்கூட்டத்தை தடுத்த  நிறுத்த உள்ளூர் அமைச்சர் வேலுமணி முயற்சி  மேற்கொள்கிறார். நாங்கள் நினைத்தால் நீங்கள் ஒரு கூட்டம்கூட நடத்த  முடியாது. உங்கள் முதல்வர் கூட ஒரு கூட்டத்தில் பேச முடியாது. இதை எனது எச்சரிக்கையாக  கூறுகிறேன்’ என்றார்.  பின்னர், ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவலூர் கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  கோவை தொண்டாமுத்தூரில் நடந்த தி.மு.க. மக்கள் கிராம சபை கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த பெண் ஒருவர் புகுந்து, கலகம் ஏற்படுத்த முயன்றார்.

 ஆனால், நாம் உஷாராகி விட்டோம். ஏனென்றால், நாம், கலைஞர் வழியில், அண்ணா வழியில் வந்தவர்கள். அதனால், அமைதியாக இருந்து, அந்த சகோதரியை பத்திரமாக காவல் துறையினரிடம் ஒப்படைத்தோம். ஆனால், அந்த பெண், என்னை எல்லோரும் சேர்ந்து அடித்துவிட்டனர் என பொய் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமல்ல, அங்கிருந்தபடியே செல்போனில் அமைச்சர் வேலுமணியிடம் பேசுகிறார். இது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதிலிருந்து அந்த பெண்ணை, யார் அனுப்பி இருக்கிறார்கள் என தெளிவாக தெரியவந்துள்ளது என்றார். இதற்கிடையில், ரகளை செய்த பூங்கொடி, பல்வேறு காலக்கட்டங்களில் அமைச்சர் வேலுமணியுடன் இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பூங்கொடி, தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், ‘‘அடையாளம் காட்டக்கூடிய தி.மு.க.வினர் 10 பேர் சேர்ந்து என்னை தாக்கினர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தி.மு.க. தரப்பில், கோவை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், ‘‘தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூண்டுதலின்பேரில், அ.தி.மு.க.வை சேர்ந்த பூங்கொடி என்ற பெண், தி.மு.க. கூட்டத்தில் புகுந்து கலகத்தை ஏற்படுத்தினார். அவர் மீதும், அவரை தூண்டிவிட்ட அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு புகார் மனுக்களையும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார். ஆனால், நேற்று நள்ளிரவு வரை இரு தரப்பிலும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில், பூங்கொடி, கோவை அரசு மருத்துவமனையில் அவராகவே அட்மிட் செய்துகொண்டார்.

Related Stories:

>