×

சளி, இருமல், காய்ச்சல், சளி, மூச்சுத் திணறலுக்கு ‘சிவப்பு எறும்பு சட்னி’ சாப்பிட்டால் கொரோனா போயிடும்: ஆயுஷ் அமைச்சகம் பதிலளிக்க ஒடிசா ஐகோர்ட் உத்தரவு

புவனேஸ்வர்: சளி, இருமல், காய்ச்சல், சளி, மூச்சுத் திணறலுக்கு ‘சிவப்பு எறும்பு சட்னி’ சாப்பிட்டால் சரியாகும் என்பதால், கொரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவுக்கு பதிலளிக்க ஆயுஷ் அமைச்சகதுக்கு ஒடிசா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்த செய்திகள் ஒருபக்கம் பேசப்பட்டாலும், தொற்று பாதிப்பில் இருந்து பல்வேறு மருத்துவ முறைகள், நம்பிக்கை அடிப்படையிலான செயல்கள் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சளி, இருமல், காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல், உடல் சோர்வு மற்றும் பிற உடல் பிரச்னைகளுக்கு ‘சிவப்பு எறும்பு’களை பிடித்து கொன்று, அதனுடன் பச்சை மிளகாய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து சட்னியாக்கி சாப்பிடும் பழக்கம் ஒடிசா, சட்டீஸ்கர் போன்ற மாநில பழங்குடி மக்களிடையே உள்ளது. இவர்கள் எறும்பு சட்னி மட்டுமின்றி சிவப்பு எறும்பை பிடித்து சூப் வைத்தும் சாப்பிடுகிறார்கள். தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்க சிவப்பு எறும்பை பிடித்து சட்னியாக்கி சாப்பிடுவது இம்மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் பாரிபாடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் நயதர் பதியால் என்பவர், ஒடிசா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘கொரோனாவுக்கு எதிரான சிவப்பு எறும்பு சட்னியின் செயல்திறன் மற்றும் சக்தி குறித்து ஆய்வை மேற்கொள்ள கடந்த ஜூன் மாதம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுக்கு விண்ணப்பித்தேன். அவர்கள், எனது மனுவை நிராகரித்துவிட்டனர். எனவே, மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் எறும்பு சட்னி குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இவ்விவகாரம் குறித்து முடிவை தெரிவிக்குமாறு மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மனுதாரர் நயதர் பதியால் கூறுகையில், ‘சிவப்பு எறும்பு சட்னியில் ஃபார்மிக் அமிலம், புரதம், கால்சியம், வைட்டமின் பி -12, துத்தநாகம் மற்றும் இரும்பு சத்துகள் உள்ளன. அதனால், அதனை சட்னியாக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒடிசா, மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஆந்திரா, அசாம், இமாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மாநில பழங்குடியின மக்கள் சிவப்பு எறும்பு சட்னி சாப்பிட்டு பல நோய்களில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் சிவப்பு எறும்பு சட்னி பயனுள்ளதாக உள்ளது. எனவே, இதுகுறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

Tags : Corona ,Odisha iCourt , Corona, Ministry of AYUSH, Odisha highCourt, Order
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...