×

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்?

* மல்லுக்கட்டும் மாஜிக்கள், புதுமுகங்கள்
* தவிப்பில் சிட்டிங் எம்எல்ஏக்கள்

திருச்சி: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதம் இருந்தாலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இப்போதே பிரசாரத்தை துவக்கி விட்டன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. தங்கள் தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அதிமுக சார்பில் சீட் கேட்க இருப்பவர்கள் யார், யாருக்கு சீட் கிடைக்கும் என்று அந்த கட்சியினர் பரபரப்பாக விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி அதிமுக முகாமில் கிடைத்த தகவல்கள் வருமாறு:

மண்ணச்சநல்லூர்
இந்த தொகுதி தற்போது ஆளுங்கட்சி வசம் உள்ளது. பரமேஸ்வரி முருகன் எம்எல்ஏவாக உள்ளார். இவர் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. தொகுதிக்கு சொல்லிக்கொள்ளும்படி எதுவுமே செய்யவில்லை என்று ஆளுங்கட்சி தரப்பினரே குற்றம் சாட்டுகின்றனர். எனவே மீண்டும் பரமேஸ்வரிக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர். முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ் தங்கவேல், மாவட்ட கவுன்சிலர் அய்யம்பாளையம் ரமேஷ், மாவட்ட மாணவரணி செயலாளரும், திருப்பஞ்சீலி கூட்டுறவு சங்க தலைவருமான அறிவழகன் உள்ளிட்ட பலரும் சீட் கேட்கும் முடிவில் உள்ளனர். இதில் அறிவழகன் மற்றும் பூனாட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம், அறிவழகனுக்கே யோகம் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

முசிறி
இந்த தொகுதியும் அதிமுக வசம் தான் உள்ளது. செல்வராஜ் எம்எல்ஏவாக உள்ளார். முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஸ்வீட் ராஜா, ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் ரவிசந்திரன் உள்ளிட்ட பலரும் சீட் கேட்கும் ரேஸில் உள்ளனர். சிவபதி கடந்த பாராளுமன்ற தேர்தலில்  பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிவபதியை மாப்பிள்ளை என்று உறவுமுறை கூறி அழைப்பார். அந்த அளவுக்கு இருவருக்கும் ெநருக்கும். எனவே அனைவரையும் ஓரங்கட்டி விட்டு, சிவபதி சீட் வாங்கி விடுவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

துறையூர்
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் இது தனி தொகுதியாகும். முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் விஜய் அறிவழகன், உப்பிலியபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் மைவிழி அன்பரசு, செயற்குழு உறுப்பினர் சரோஜா உள்ளிட்ட பலரும் சீட் கேட்க உள்ளனர். இதில் இந்திரா காந்தி, விஜய்அறிவழகன் ஆகியோர் மட்டுமே தற்போதைய நிலவரப்படி ரேஸில் முன்னணியில் உள்ளனர். முடிவில் இந்திரா காந்திக்கு வாய்ப்பு கிட்டும் என்று கண் சிமிட்டுகின்றனர் அதிமுகவினர்.


லால்குடி

தெற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் விடிஎம்.அருண் நேரு, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜாராம், பிச்சை பிள்ளை, பொதுக்குழு உறுப்பினர் விஜயா செழியன், ஒன்றிய கவுன்சிலர் ஜீவா என 15க்கும் மேற்பட்டோர் சீட் கேட்க உள்ளனர். இதில் அசோகன், சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

திருவெறும்பூர்
தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் இந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் எடப்பாடிக்கும் நெருக்கமாக இருப்பதால், இவருக்கே சீட் வழங்கப்படும். வேறு யாரும் பரிசீலனையில் இல்லை என்று அதிமுகவினரே அடித்துக்கூறுகின்றனர். எனினும் ஒன்றிய செயலாளர் ராவணன், மேற்கு ஒன்றிய செயலாளர் கும்பக்குடி கோவிந்தராஜ், துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், பகுதி செயலாளர் பாஸ்கர் ஆகியோரும் சீட் கேட்டு பணம் கட்ட உள்ளனர்.

மணப்பாறை
இந்த தொகுதி எங்கள் கோட்டை என்று அதிமுகவினர் மார்தட்டிக்கொள்கின்றனர். காரணம் 2001 முதல் தொடர்ந்து 4 முறை இங்கு அதிமுக வென்றுள்ளது. 5வது முறையாகவும் அதிமுகதான் வெற்றி பெறும் என்று நம்புகின்றனர். இதனால் சீட் கேட்பவர்களின் எண்ணிக்கையும் 20க்கும் மேல் உள்ளது. இதில் சிட்டிங் எம்எல்ஏ சந்திரசேகருடன் சேர்த்து, தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன், வையம்பட்டி ஒன்றிய செயலாளர் சேது, மணப்பாறை ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், வக்கீல் முருகன் ஆகியோர் சீட் கேட்க இருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த தொகுதியில் ஊராளி கவுண்டர்கள் அதிகம் இருப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கும் போட்டியிடலாம் என்று பேசப்பட்டது. இதை நேற்றுமுன்தினம் திருச்சி வந்த முதல்வரே மறுத்து விட்டார். எனவே உள்ளூர் பிரமுகர்களுக்கே வாய்ப்பு கிடைக்க உள்ளது. தொடர்ந்து 2 முறை எம்எல்ஏவாக இருப்பதால், சந்திரசேகருக்கு இந்த முறை சீட் தரக்கூடாது, புதியவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று சொந்த கட்சியினரே கூறி வருகின்றனர். எனவே இங்கு யாருக்கு அதிர்ஷ்டம் என்பது தேர்தல் நெருக்கத்தில் தெரிந்து விடும்.

ஸ்ரீரங்கம்
2011ல் இங்கு ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். ஜெயலலிதாவின் சொந்த தொகுதிகளில் இதுவும் ஒன்று. இதனால் இங்கு போட்டியிட அதிமுகவினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போதைய எம்எல்ஏவும், அமைச்சருமான வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகின்றனர். இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அதிமுகவினர் இப்போதே பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். சீட் ரேஸில் முந்துவது யார் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.

மேற்கு
முன்னாள் அமைச்சர் நல்லுசாமி மகன் டாக்டர் செந்தில் குமார், பகுதி செயலாளர் ஞானசேகர், முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் வனிதா மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் துணை முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் அலீம் ஆகியோரும் சீட் கேட்க உள்ளனர். ரங்கத்தில் சீட் கிடைக்காத பட்சத்தில் இந்த தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியும் ஆர்வம் காட்டி வருகிறார். ஏனெனில் இடைத்தேர்தலில் இங்கு போட்டியிட்டு பரஞ்சோதி வென்றுள்ளார். எனினும் இங்கு இரு டாக்டர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

கிழக்கு
இந்த தொகுதியின் எம்எல்ஏ அமைசச்ர் வெல்லமண்டி நடராஜன். இவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோருடன் மிகவும் நெருக்கமாக உள்ளார். ஆவின் சேர்மனும், மாவட்ட மாணவரணி தலைவருமான கார்த்திகேயன், டாக்டர் தமிழரசி என பலர் போட்டியிடும் ஆர்வத்தில் இருந்தாலும், வெல்லமண்டி நடராஜனுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்று அதிமுகவினர் உறுதியாக கூறுகின்றனர்.

Tags : constituencies ,AIADMK ,district ,Trichy , Who are the AIADMK candidates contesting in all the 9 constituencies in Trichy district?
× RELATED அதிமுகவில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 15...