குடியாத்தம் அருகே ஆட்டை அடித்துக்கொன்றது; சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் கடும் பீதி: வனத்துறை எச்சரிக்கை

குடியாத்தம்: குடியாத்தம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இவை தமிழகத்தின் மிகப்பெரிய 2வது வனச்சரகமாகும். இங்கு யானை, கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு நாய், மான், காட்டுக்குரங்கு உள்ளிட்ட விலங்குகள் உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைக்கூட்டம் விவசாய நிலங்களில் அவ்வப்போது புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகிறது.

இந்நிலையில், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி, அனுப்பு தேவரிஷிகுப்பம் காப்புக்காடு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. இந்த சிறுத்தைகள் கிராமங்களில் மலைப்பகுதி அருகில் மேய்ந்து கொண்டிருக்கும், கால்நடைகளையும, நாய், கோழிகளை கொன்று தின்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் குடியாத்தம் அடுத்த காங்குப்பம் பகுதியில் வனப்பகுதியையொட்டி மேய்ந்துகொண்டிருந்த விவசாயி அரிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை சிறுத்தை அடித்துக்கொன்றது. பின்னர் ஆட்டின் உடலை பாதி தின்றுவிட்டு மீதி உடலை மட்டும் விட்டு விட்டு சென்றுள்ளது.

இதையறிந்த கிராமமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தகவலறிந்த வனத்துறையினர் அங்கு வந்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதில், கிராமமக்கள் யாரும் இரவு நேரத்தில் வெளியில் நடமாடவேண்டாம், கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல வேண்டாம் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories:

>