×

கொரோனா ஊரடங்கால் உணவின்றி வாடியது; விலங்கு ஆர்வலரால் உயிர்ப்பிழைத்த தெருநாய்: காவல்நிலையத்தில் புது நண்பன்

திருவனந்தபுரம்: கோழிக்கோடு பல்கலைக்கழக வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் வலம்வந்து கொண்டிருந்தன. பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் வீசும் எஞ்சிய உணவுகளை சுவைத்து, நன்கு உடல் வளர்த்து வந்தன இந்த தெருநாய்கள். சில பெண் நாய்கள் குட்டிகளை ஈன்று நாய்களின் எண்ணிக்கையை அதிகரித்து வந்தன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இதனால் நாய்கள் உணவின்றி தவித்தன. உடல் கொழுத்து திரிந்த நாய்கள் கருவாடாய் வாடி வதங்கின. உணவின்றி உயிர்ப்போகும் நிலை ஏற்பட்டதால் நாய்கள் அங்கிருந்து வெளியேறின. அவை திசைக்கொன்றாய் உணவு தேடி அலைந்தன.

பல நாட்களுக்கு இடையே எங்கோ ஓரிடத்தில் கிடைக்கும் சிறிய உணவுக்கு நாய்களிடையே சண்டை. ஒன்றுக்கொன்று குரைத்து கடித்து உணவை பறித்தன. இதில் காயமடைந்த நாய்களில் ஒன்று தப்பி மலப்புரம் மாவட்டம் காவல் நிலையத்துக்கு வந்தது. எலும்பும், தோலுமாக காட்சியளித்த அதற்கு சில போலீசார் உணவளித்தனர். இதனால் அந்த நாய் தினமும் காவல் நிலையம் முன் ‘தோன்றியது’. அதன் உடலில் மற்ற நாய்கள் கடித்ததால் ஏற்பட்ட ஆழமான காயங்கள் காணப்பட்டன. இதனால் நாய் மீது பரிதாபப்பட்ட போலீஸ்காரரும், இளம் விலங்கு ஆர்வலருமான நீரஜ் கோளேரி என்பவர் நாயின் காயங்களுக்கு மருந்திட்டு, உணவளித்து பராமரித்து வந்தார்.

அவர் நாய்க்கு ஓமனக்குட்டன் என பெயரிட்டார். தற்போது நன்கு உடல்நிலை தேறிய ஓமனக்குட்டன் காவல் நிலையத்தை விட்டு எங்கும் செல்வதில்லை. அது காவல் நிலையத்தின் அன்பான நண்பனாக மாறிவிட்டது. தற்போது ஓமனக்குட்டனுக்கு நீரஜ் கோளேரி பயிற்சியும் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Corona ,Survivor ,animal lover ,police station , Corona cortex withered without food; Survivor street dog by animal lover: New friend at police station
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...