முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் இன்று காலை டெல்லியில் இறந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் (86) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் இன்று காலை உயிரிழந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பூட்டா சிங், தனது சுயநினைவை இழந்ததால் கடந்த அக்டோபர் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே இன்று காலை 5.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் பிறந்த பூட்டா சிங், முதல் முதலாக சாத்னா மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆனார். அதன்பின்னர் 7 முறை வெற்றி பெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சர், கவர்னர் பதவி தவிர கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் பூட்டா சிங் சிறப்பாக செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>