பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூரில் மண் அடுப்பு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

திருவாரூர் : பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூரில் மண் அடுப்பு மற்றும் பானை செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையானது தமிழர் திருநாளாக நாடு முழுவதும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்வது, வர்ணம் தீட்டுவது போன்ற பணிகளை மேற்கொள்வர். இதுமட்டுமன்றி பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகையன்று வீட்டில் இருந்து வரும் தேவையில்லாத பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்துவதையும் வழக்கமாக கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்காக மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மற்ற பண்டிகைகளை விட இந்த பண்டிகையானது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி தாய்,தந்தை மற்றும் உறவினருடன் ஒன்றாக பொங்கலிட்டு வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் பொங்கல் என்றாலே பச்சரிசி வெல்லம் மற்றும் முந்திரி,திராட்சை, ஏலம், நெய் கொண்ட சர்க்கரைப்பொங்கல் மட்டுமின்றி வெண் பொங்கலும் செய்யப்பட்டு வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.மேலும் இந்த பொங்கல் பண்டிகையில் செங்கரும்பு மற்றும் வாழைப்பழமும் இந்த பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

மேலும் பொதுமக்கள் தங்களிடம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் பெருகினாலும் பெரும்பாலானவர்கள் தற்போது வரையில் இந்த பொங்கல் பண்டிகையை மண்பானையும்,மண் அடுப்பையும் கொண்டு பழமை மாறாமல் கொண்டாடும் நிலை இருந்து வருகிறது. இதனையொட்டி திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான், அலிவலம் உட்பட பல்வேறு இடங்களில் மண் பானை, மண் அடுப்பு செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>