புத்தாண்டு கேக் தர மறுத்ததால் பேக்கரி தீவைத்து எரிப்பு: 4 பேர் கைது

தாம்பரம்: கிழக்கு தாம்பரம், கணபதிபுரத்தை சேர்ந்த முருகன் (30), அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த 4 பேர், புத்தாண்டு கொண்டாட கேக் கேட்டனர். அதற்கு முருகன், கடை மூடும் நேரமாகி விட்டதால் கேக் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், முருகனை தாக்கிவிட்டு தப்பினர். இதில், பலத்த காயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே, நேற்று அதிகாலை மீண்டும் அங்கு வந்த சிலர், பேக்கரிக்கு தீ வைத்துவிட்டு தப்பினர். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், பேக்கரியை தீவைத்து எரித்ததாக 4 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். விசாரணையில், இரும்புலியூரை சேர்ந்த பிலிப்ஸ் கிளமெண்ட் (19), கணபதிபுரம் பகுதியை சேர்ந்த லோகேஷ் (19), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தனுஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

Related Stories:

>