×

போதையில் கார் ஓட்டி விபத்து விசாரிக்க வந்த ஆய்வாளரை மிரட்டிய போதை வாலிபர்: வாகனம் பறிமுதல்

அண்ணாநகர்:  அண்ணாநகர் 5வது அவென்யூ தனியார் பள்ளி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு அதிவேகமாக சென்ற கார், அவ்வழியாக வந்த ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோ பலத்த சேதமடைந்ததால், கார் ஓட்டிவந்த வாலிபருடன் ஆட்டோ டிரைவர் தகராறில் ஈடுபட்டார். போதையில் இருந்த வாலிபர், ஆட்டோ டிரைவரை தாக்க முயன்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்தனர். தகவலறிந்து அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, போதையில் கார் ஓட்டிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் போக்குவரத்து ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, நான் யார் தெரியுமா என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அண்ணாநகர் எம்.பிளாக் 23வது தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (24) என தெரிந்தது.

அங்கும், அவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அவரது தந்தையை தொடர்புகொண்டு காவல் நிலையம் வரவழைத்தனர். அப்போது, தனது மகன் செய்த தவறுக்காக அவர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார். அதன்பேரில், போதையில் இருந்த யோகேஸ்வரனை போலீசார் விடுவித்து, மீண்டும் இதுபோல் நடந்து கொண்டால் வழக்கு பதிவு செய்வோம் என எச்சரித்து அனுப்பினர். விபத்து ஏற்படுத்திய யோகேஸ்வரன் காரை பறிமுதல் செய்தனர்.

Tags : investigator ,accident , Intoxicated, driving a car, accident, drug addict, vehicle confiscation
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...