×

ஆஸிக்கு எதிரான 3வது டெஸ்ட் மீண்டும் போர்க்களத்தில் நடராஜன்

மெல்போர்ன்: வேகம் உமேஷ் யாதவ் காயம் காரணமாக விலகியதால், 3வது டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் நடராஜன் அசத்தினார். அதனால்,  ஆஸி சென்ற இந்திய அணிக்கு பயிற்சியின் போது பந்து வீசும் வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது. இந்நிலையில் டி20 அணியில் இடம் பிடித்த மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவரத்தி காயம் காரணமாக விலகினார். அதனால் டி20 அணியில் முதல்முறையாக இடம் பிடித்தார் நடராஜன். ஆனால் ஒருநாள் தொடரில், இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தினாலும்  பந்து வீச்சாளர்கள் சொதப்பினர். எனவே கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட நடராஜனுக்கு திடீர் வாய்ப்பு கிடைத்தது.  சர்வதேச அளவில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அசத்தினார். அந்த போட்டியில் இந்தியா வென்றது.

தொடர்ந்து டி20 தொடரில் 3 போட்டிகளிலும் விளையாடிய நடராஜன், விக்கெட்களை அள்ளினார். இந்தியா தொடரை வென்றது. அதனால் டெஸ்ட் தொடரிலும் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் வீரர்களும் வலியுறுத்தினர். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், இந்திய பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி, ஆஸியை அலற வைக்கின்றனர். அதனால் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக  நடராஜன் அணியில் இடம் பிடித்துள்ளார்.திடீர் வாய்ப்புகள் என்றாலும், நடராஜன் திறமையை வெளிப்படுத்துவதில் குறை வைத்ததில்லை. எளிய குடும்பத்தில் இருந்து வந்த நடராஜன், இந்திய அணியில் இடம் பெறுவதையே ரசிகர்கள் சாதனையாக  கருதுகின்றனர். அரிதாக கிடைக்கும் இதுப்போன்ற வாய்ப்பை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். அதனால் தான் நடராஜன் வெற்றிகளை,  போர்களத்தில் கிடைத்த விழுப்புண்களாக ரசிகர்கள் பார்க்கின்றனர். அதிலும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிகளை போர்களாவே பார்த்து பழகிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நடராஜன் போராட்டமும் போராவே தெரிகிறது.

ஏற்கனவே  துணை கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், நடராஜனுக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது 3வது டெஸ்ட் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் 3வது டெஸ்ட் ஜன.7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

Tags : Natarajan ,Test ,Aussies , Aussie, 3rd, Test, Battlefield, Natarajan
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை