பல நாடுகளில் ஏற்கனவே தோன்றி மிரட்டிய மர்ம உலோகத் தூண் குஜராத்துக்கும் வந்தது: வேற்றுகிரகவாசிகள் செயலா?

அகமதாபாத்: அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய மர்ம தூண், குஜராத்திலும் தோன்றியுள்ளது. பூமிக்கு அப்பாற்பட்டு மற்ற கோள்களிலும் வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவர்களை கண்டுபிடிக்க, தொடர்ந்து முயற்சிகள் செய்யப்படுகின்றன. வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தை மனித குலத்திற்கு ஏற்படுத்தக் கூடிய பல அபூர்வ சம்பவங்கள், உலகில் ஆங்காங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் சமீப காலமாக பல்வேறு நாடுகளை அச்சுறுத்துக் கொண்டிருக்கும் ‘மர்ம தூண்.’அமெரிக்காவில் உள்ள யூட்டா பாலைவனத்தில் கடந்தாண்டு நவம்பர் 18ம் தேதி உலகிலேயே முதல் முறையாக இந்த மர்ம தூண் காணப்பட்டது. ‘மோனோலித்’ எனப்படும் இந்த உலோகத் தூண், அடுத்த நாட்களில் திடீரென மறைந்து விட்டது.பின்னர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ருமேனியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளில் அடுத்தடுத்து காணப்பட்டு, மீண்டும் மறைந்தது.

இதனால், இந்த தூண் எப்படி இப்பகுதிகளுக்கு வந்தது, யாராவது வேண்டும் என்றே அமைத்தார்களா அல்லது வேற்றுகிரகவாசிகளின் செயலா? என்ற பலத்த சந்தேகம், அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. இது, விஞ்ஞானிகளை மிகவும் குழப்பி இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவுக்கும் இந்த மர்ம தூண் வந்துள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் இந்த  தூண் காணப்பட்டுள்ளது. இதை பூங்காவில் பணியாற்றும் தோட்டக்காரரான ஆசராம் என்பவரும் உறுதி செய்துள்ளார். “நான் வேலையை முடித்து விட்டு மாலை வீட்டுக்கு சென்றபோது அது இல்லை. மறுநாள் காலையில் வேலைக்குத் வந்தபோது, அந்த தூணையும், அதன் அமைப்பையும் பார்த்து ஆச்சரியப்பட்டேன்,” என்கிறார் அவர். இது பற்றி கேள்விப்பட்டதும் பூங்காவுக்கு விரைந்த ஏராளமான மக்கள், தூணுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories:

>