கண்டு கொள்ளாத மகன் சொத்தில் பாதியை நாய்க்கு எழுதி வைத்த விவசாயி: மபி.யில் பரபரப்பு சம்பவம்

போபால்: சொத்து விவகாரத்தில் தந்தைக்கும் மகனுக்கு சண்டை ஏற்படுவது சகஜமான விஷயம் தான். ஆனால், அதற்கான மகனுக்கு சல்லி காசு கூட தராமல்  சொத்தில் ஒரு பாதியை விவசாயி ஒருவர் தனது செல்ல பிராணியான நாய்க்கு எழுதி வைத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டம், பரிபாடா கிராமத்தை சேர்ந்தவர் ஓம் நாராயணன் வர்மா (50). விவசாயி. 2 ஏக்கர் பரம்பரை நிலத்தில் உழுது விவசாயம் செய்து வருகிறார். இவரது மகனின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த நாராயணன், தனக்கு பிறகு தனது சொத்துக்கான வாரிசு குறித்து வித்தியாசமான உயில் எழுதி உள்ளார். சொத்தில் சல்லி காசை கூட மகனுக்கு தரவில்லை. சொத்தில் ஒரு பகுதியை தனது செல்லப் பிராணியான ஜாக்கி எனும் நாட்டு நாய்க்கும், மீதமுள்ள நிலத்தை மனைவி பெயருக்கும் எழுதி வைத்துள்ளார். தனக்கு பிறகு தனது நாயை கவனமாக பராமரிப்பவர்கள் அதன் பெயரில் உள்ள நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இது குறித்து நாராயணன் கூறுகையில், ‘‘என் மீது மனைவியும், ஜாக்கியும் தான் பாசமாக உள்ளனர். என்னை அவர்கள்தான் கவனித்துக் கொள்கின்றனர். அதனால் அவர்களுக்குதான் என் சொத்து,’’ என கூறி உள்ளார். ஆனால், கிராம தலைவர்கள் நாராயணனை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories:

>