×

காவிரி பாசன கட்டமைப்புகளை மேம்படுத்த நபார்டு வங்கி மூலம் ரூ.3384 கோடி தர ஒப்புதல்

* முதல் கட்டமாக ₹224 கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழக அரசு உத்தரவு

சென்னை: காவிரி ஆற்றின் பாசன கட்டமைப்பை மேம்படுத்த ₹3,384 கோடி வழங்க நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதில், முதல்கட்டமாக ₹224 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவிரி ஆற்றில் உள்ள 18 உபவடிநிலங்களில் உள்ள கட்டமைப்புகள் பழமையானதாக உள்ளது. இதனால் வெள்ள காலத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில், காவிரி உபவடிநிலம், வெண்ணாறு உபவடிநிலம், கீழ் பவானி திட்டம், கீழ் கொள்ளிட உபவடிநிலம், கல்லணை கால்வாய் உபவடிநிலம் மற்றும் பிற திட்டங்களான கட்டளை உயர் மட்ட கால்வாய் திட்டம்,  நொய்யல் உபவடிநிலம்  உள்ளிட்டவற்றின் பாசன கட்டமைப்புகளை மேம்படுத்த பொதுப்பணித்துறை முடிவு செய்தது.  இதை தொடர்ந்து 90 சதவீதம் நபார்டு கடனுதவி மற்றும் 10 சதவீதம் தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த திட்டத்துக்காக ₹3384 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அதன்படி தற்போது ராஜவாய்க்கால் திட்டத்துக்கு ₹184 கோடி, நொய்யல் ஆறு திட்டம், ₹230 கோடி, கட்டமை உயர்மட்ட கால்வாய் திட்டத்துக்கு ₹335.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு வேகமாக நடந்து வருகிறது
இந்த நிலையில், காவிரி ஆற்றின் உபவடிநி நிலத்தை புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் பணிகளுக்கு ₹3384 கோடி வழங்க நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ₹224.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

அதில், காவிரி ஆற்றின் பாசன உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 33 பேக்கேஜ் பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது. மேல் காவிரி ஆற்று பகுதிகளில் வெள்ள நீரால் பாதிக்கப்படும் பகுதிகளில் எளிதாக தண்ணீரை திருப்பி விட்டு டெல்டா பகுதி முழுவதும் தண்ணீர் செல்லும் வகையில் கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. இப்பணிகளை மேட்டூரில் இருந்து ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் 16ம் தேதி கல்லணைக்கு வருகிறது. அதற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படுகிறது. ₹122 கோடி செலவில் காவிரி உபவடிநிலத்தில் தஞ்சாவூர் பூதலூர் தாலுகாவில் காவிரி ஆற்றில் 17/2 முதல் 22/6 வரையும், ₹102.20 கோடி செலவில் பூதலூர் முதல் திருவையாறு வரை 26/6 முதல் 37/1 வரை காவிரி ஆற்றில் பாசன உட்கட்டமைப்புகளை புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தப்படுகிறது. இப்பணிகளுக்காக நடப்பாண்டில் ₹10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப்பணிகளை நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் சீரமைத்தல் கழகத்திடம் டெபாசிட் வேலையாக பெறப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இப்பணிகளுக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு பிப்ரவரியில் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : NABARD ,Cauvery , Cauvery Irrigation, Construction, NABARD, Rs.3384 crore
× RELATED பால் பாக்கெட்டுகள் தயாரித்து...