×

புத்தாண்டுக்கு முந்தைய நாள் ரூ.160 கோடிக்கு மது விற்பனை: டாஸ்மாக் அதிகாரி தகவல்

சென்னை: புத்தாண்டுக்கு முந்தைய நாள் தமிழகத்தில் ₹160 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு ₹80 முதல் ₹90 கோடி வரையில் மதுவிற்பனை நடைபெறும். குறிப்பாக, புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற விழா நாட்களில் ₹240 கோடிக்கும் மேல் மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் பெரும் பொருளாதார இழப்பை அரசு சந்தித்தது. இதையடுத்து, மே மாதம் டாஸ்மாக் கடைகளை அரசு திறந்தது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய கடைகளில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி, 2021 புத்தாண்டிற்கு ₹620 கோடி மதுவிற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்தது. இதற்காக கடைகளில் கூடுதல் மதுபானங்களை ஊழியர்கள் இருப்பு செய்தனர். இந்தநிலையில், நேற்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை (டிச.31ம் தேதி) டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் மதுவிற்பனை செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாமலும், சானிடைசர் பயன்படுத்தாமலும், சமூக இடைவெளி இன்றியும் மதுவிற்பனை நடைபெற்றது.

ராயப்பேட்டை, கோயம்பேடு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மணலி, மாதவரம், தண்டையார்ப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தாம்பரம், கிண்டி போன்ற பகுதிகளில் இருந்த டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்தது. இந்தநிலையில், நேற்று முன்தினம் தமிழகத்தில் ₹159.04 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் ₹48.75 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ₹28.10 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ₹27.30 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ₹26.49 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ₹28.40 கோடி என மொத்தம் ₹159.04 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதேபோல், புத்தாண்டான நேற்று ₹270 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றிருக்கலாம் என டாஸ்மாக் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

Tags : Tasmag ,New Year's Eve , On the eve of the New Year, liquor sales for Rs 160 crore
× RELATED மராட்டியம்: மராத்தியர்களின் புத்தாண்டான குடி பத்வா கோலாகல கொண்டாட்டம்