வெள்ளக்கோவிலில் பரிகார பூஜை நடத்தி பரிகார பூஜையில் பெண்ணை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அகரப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவரது மனைவி ஈஸ்வரி (55). ஆறுமுகம், வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் செல்லும் சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர்களது மகன் உதயகுமாருக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஈஸ்வரி தனது மகனுக்கு குழந்தை வேண்டி, வெள்ளக்கோவில், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் (45) மூலம் பரிகார பூஜை செய்ய முடிவு செய்தார். அதன்படி, கடந்த 30ம் தேதி அதிகாலை பர்னிச்சர் கடையில் பூஜை நடந்தது. அப்போது சக்திவேல் சுத்தியலால் ஈஸ்வரி மற்றும் ஆறுமுகத்தை தாக்கி விட்டு, 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு, கடையின் ஷட்டரை வெளிப்புறமாக அடைத்து விட்டு தப்பினார். இதில், ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஆறுமுகம் ரத்த வௌ்ளத்தில் மயங்கினார். இந்நிலையில், மதுரையில் பதுங்கி இருந்த சக்திவேலை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்டது. விசாரணையில், ஆறுமுகத்தின் பர்னிச்சர் கடையில் விற்பனையாகும் பொருட்களை சக்திவேல் ஆட்டோ மூலம் எடுத்து செல்வது வழக்கம். சக்திவேலுக்கு 1 லட்சம் வரை கடன் இருந்துள்ளது. கடனை அடைக்க  பரிகார பூஜையின் போது இருவரையும் தாக்கி  பணம், நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.

Related Stories:

>