×

சென்னையில் புத்தாண்டு மது விருந்தில் மோதல் சினிமா உதவி இயக்குநர் உள்பட 2 பேர் கொலை: ஒருவர் கைது

சென்னை: சென்னையில் புத்தாண்டு மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் சினிமா உதவி இயக்குனர் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ருத்ரன் (25). வளசரவாக்கத்தில் தங்கி பிரபல சினிமா இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இவர், ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தை நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டல்கள், விடுதிகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டதால், அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள தனது நண்பரும், சினிமா உதவி இயக்குநருமான மணிகண்டன் (25) வீட்டில் கொண்டாட முடிவு செய்தார். அதற்கு மணிகண்டனும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ருத்ரன் தனது நண்பர்களான குருசஞ்சய் (25), ராம்குமார் (26) உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். அங்கு நள்ளிரவு வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

அப்போது ருத்ரன் சிகரெட் புகைத்ததால் அவரை மணிகண்டன் கண்டித்துள்ளார். உடனே ருத்ரன் சிகரெட் புகையை மணிகண்டன் முகத்தில் ஊதியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ருத்ரன், மணிகண்டன் முகத்தில் ஓங்கி குத்துவிட்டுள்ளார். இதில் மணிகண்டனுக்கு காயம் ஏற்பட்டது. நண்பர்கள் மத்தியில் தன்னை அடித்து அவமானப்படுத்தியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன், சமையல் அறையில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து ருத்ரன் மார்பில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மயங்கிய ருத்ரனை சக நண்பர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த மாங்காடு போலீசார், ருத்ரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்:  நுங்கம்பாக்கம் காம்தார் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் காதர் (56), வீடு புரோக்கர். மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவரும், அதே பகுதியில் செக்யூரிட்டி வேலை செய்து வரும் பழனியும் நண்பர்கள். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பழனி வீட்டில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அங்கு, காதரும், பழனியும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பழனியை ஆபாசமான வார்த்தையால் காதர் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பழனி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து காதரை சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த காதர் பரிதாபமாக இறந்தார்.
பின்னர், போலீசில் சிக்காமல் இருக்க தனது அண்ணனுடன் சேர்ந்து, காதர் சடலத்தை சாலையில் வீசிவிட்டு தப்பியுள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பழனி வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது ரத்தக்கறை படிந்திருந்தது. தலைமறைவாக உள்ள பழனியை தேடி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போதை மயக்கத்தில் 2 பேர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய கும்பல்

ஆதம்பாக்கம் இந்திரா காந்தி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் விமல் ராஜ் (24). இவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் விமல்ராஜ், தனது பைக்கில் உறவுக்காரர் தீபக் (19) என்பவருடன்  ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் நோக்கி சென்றார். புத்தாண்டுக்கு இரவில் சாலையில் நடமாட போலீசார் தடை விதித்தும்கூட  ஒரு கும்பல் சாலையின் நடுவே நின்று கொண்டு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி,   உற்சாகமாக பாட்டுப்பாடி புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவர்களிடம்  வழிவிடுமாறு தீபக் கேட்டுள்ளார். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை விலக்க முயன்ற விமல்ராஜை அந்த கும்பல் பட்டாக்கத்தியால் இடது பக்க முதுகு, தலை போன்ற பகுதிகளில் பலமாக வெட்டியது. இதில் கீழே விழுந்த விமல் ராஜை, தீபக் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு  குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து,  ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விமல்ராஜை வெட்டிவிட்டு தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.

Tags : New Year's Eve ,party ,Chennai , Chennai, New Year, wine party, cinema assistant director, murder
× RELATED மராட்டியம்: மராத்தியர்களின் புத்தாண்டான குடி பத்வா கோலாகல கொண்டாட்டம்