×

கடந்த டிசம்பரில் இதுவரை இல்லாத உச்சம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியை தாண்டியது

புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ₹1.15 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு தொழில்துறைகள் முடங்கியதால் மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வருவாய் அடியோடு சரிந்தது. இதனால் ஜிஎஸ்டி வரி வசூலும் மிக குறைவாகவே வந்தது. மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ₹1 லட்சம் கோடியை தாண்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அமல்படுத்தியதில் இருந்த சில மாதங்கள் மட்டுமே இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ₹1,15,174 கோடி வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய ஆண்டு டிசம்பரில் வசூலான ₹1.03 லட்சம் கோடியை விட 12 சதவீதம் அதிகம். கடந்த நவம்பர் மாதத்துக்கு 87 லட்சம் ஜிஎஸ்டிஆர் - 3பி படிவங்கள் கடந்த மாத இறுதி வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை வசூலான மாதாந்திர ஜிஎஸ்டி வசூலில் இதுவே அதிகபட்ச அளவாகும். ஜிஎஸ்டி வரி ஏய்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி ரெய்டு நடவடிக்கைகள் மட்டுமின்றி, பொருளாதாரம் மீட்சி அடைவதன் அறிகுறியாக இந்த வசூல் சாத்தியம் ஆகியுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. இதன்பிறகு அதிகபட்சமாக கடந்த மாத ஜிஎஸ்டி வசூல் காணப்படுகிறது. இதற்கு முன்பு 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வசூலான ₹1,13,866 கோடிதான் அதிகபட்ச அளவாக இருந்தது. இதை கடந்த மாத வசூல் முறியடித்து விட்டது. ஊரடங்கிற்கு பிறகு அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தொழில்துறைகள் மீண்டு வருகின்றன என்பதையும் இது மெய்ப்பிக்கிறது என அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.  
கடந்த மாதம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டியில் மத்திய ஜிஎஸ்டி ₹21,365 கோடி, மாநில ஜிஎஸ்டி ₹27,804 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ₹57,426 கோடி அடங்கும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இறக்குமதி மூலம் ₹27,050 கோடி வசூல் ஆகியுள்ளது. செஸ் வரியாக ₹8,579 கோடி வசூலாகியுள்ளது. இதில் இறக்குமதி மூலம் ₹971 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

 ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் குறைவை ஈடுகட்ட மத்திய அரசு இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால், போதுமான அளவு வசூல் ஆகாததால், மாநிலங்கள் தங்களுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய பங்களிப்பை போராடி பெற வேண்டிய நிலை உருவானது. மேலும், மாநிலங்கள் தங்கள் தேவைக்கு கடன் வாங்குமாறு மத்திய அரசு கூறியதற்கு, பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  இந்நிலையில், கடந்த டிசம்பரில் மத்திய ஜிஎஸ்டிக்கு ₹23,276 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து மாநிலங்களுக்கு ₹17,681 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Tags : GST , Last, in December, peak, GST, collections
× RELATED திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து...