×

கோவிஷீல்டு தடுப்பூசியை மக்களுக்கு வழங்க மத்திய நிபுணர் குழு பரிந்துரை: சென்னை, நீலகிரி, நெல்லை, திருவள்ளூர் மாவட்டங்களில் 17 இடங்களில் இன்று ஒத்திகை

புதுடெல்லி: இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், இம்மருந்தை பொதுமக்களுக்கு வழங்கும் பணி தொடங்கும். இதற்கிடையே, கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று நடக்க உள்ளது. தமிழகத்தில் 17 இடங்களில் இது நடக்கிறது.

அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அடுத்த சில நாட்களில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், இந்தியாவில் அவசரகால தேவைகளுக்கு, கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர்கள் குழு நேற்று பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் முதல் தடுப்பூசி இது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம், அஸ்ட்ரஜெனகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இம்மருந்தை இந்தியாவில் சீரம் நிறுவனம் பரிசோதிக்கிறது. மேலும், அதை உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்தில் கோவிஷீல்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவிலும் அவசர கால பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்குமாறு அந்நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இதனை, மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழு ஆய்வு செய்தது. இதன் அடிப்படையில், நிபுணர் குழுவினர் கோவிஷீல்டுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். அடுத்ததாக, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இறுதி அனுமதி வழங்கும். அதைத் தொடர்ந்து, கோவிஷீல்டு தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இதற்கு முன்னதாக தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற் கட்டமாக ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த மாதம் 28, 29ம் தேதிகளில் தடுப்பூசியை போடும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட நாடு முழுவதும்  இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட இருக்கிறது. மாநில தலைநகரங்களில் குறைந்தபட்சம் 3 இடங்களில் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தல் நடத்துவதைப் போலவே, கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும் முழு பயிற்சியுடன் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து மருத்துவ குழுக்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்களின் விவரங்கள் தயாரிக்கப்பட்டு அது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் 2,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து மாநிலம், மாவட்ட அளவில் 700 மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசி வழங்குவதற்கான அனுமதி கிடைத்த உடன், முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க அரசு முன்னேற்பாடுகளை முழுமையாக செய்து வருகிறது. 83 கோடி மருந்து ஏற்றும் சிரிஞ்சுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. கூடுதலாக 35 கோடி சிரிஞ்சுகள் வாங்கவும் ஏலம் நடத்தப்பட உள்ளது. தடுப்பூசி வழங்க பரிந்துரைக்கப்படும் இடங்களில் முறையான இடவசதி, போக்குவரத்து வசதி, இன்டர்நெட் இணைப்பு, மின்வசதி உள்ளிட்டவை இருப்பதை பரிசோதிக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் நேற்று மேலும் 4 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

* அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான பைசருக்கு உலக சுகாதார அமைப்பு நேற்று அனுமதி அளித்தது.

* புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்துக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இது வரும் 8ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.


விலை ரூ.1,000 மட்டுமே
கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனையில் 70 முதல் 90 சதவீதம் வரை பலன் அளித்துள்ளது. இதன் 2 டோஸ் விலை ரூ. 1,000 மட்டுமே. அதோடு, 2-8 டிகிரி செல்சியஸ் குளிர்ச்சியில் சேமித்து வைக்கலாம். எனவே, தடுப்பூசியை சேமித்து வைப்பதிலும், பைசர் உள்ளிட்ட மற்ற தடுப்பு மருந்துகளை காட்டிலும் கோவிஷீல்டு செலவு குறைவானது. இந்த தடுப்பூசியை தொடர்ந்து, இந்தியாவின் பாரத் பயோடெக், ஐசிஎம்ஆர் இணைந்து உருவாக்கி உள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : Central Expert Panel ,locations ,districts ,Nellai ,Tiruvallur ,Nilgiris ,Chennai , Covshield vaccine, for people, recommended by the Federal Expert Group
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு