×

சாத்தியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

அலங்காநல்லூர்: பாசனத்திற்காக சாத்தியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியாறு அணை 29 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று மீண்டும் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. எனவே  இந்த அணை மூலம் பாசன வசதி பெறும் பத்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சாத்தியாறு அணை பாசன விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ கடந்த 5 ஆண்டுக்கு பின் இந்த அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ஏற்கனவே அணையில் உள்ள நீர் மதகுகள் வழியாக கசிவு ஏற்பட்டு வெளியேறி வீணாகி வருகிறது. இந்த அணை மூலம் பாசன வசதி பெறும் எர்ரம்பட்டி, கோவில்பட்டி, சுக்காம்பட்டி, குருவார்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. எனவே இந்த கண்மாய்களுக்கு சாத்தியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Tags : Sathiyaru Dam: Farmers , Open water for irrigation from Sathiyaru Dam: Farmers demand
× RELATED நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்;...