×

கடலூர் அருகே கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பு

கடலூர்: கடலூர் அருகே கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவ மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு புயல் தாக்கம் மற்றும் தொடர் மழை காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளன. சில நாட்கள் மழைவிட்ட நிலையில் மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளது. பருவமழையின் தாக்கம் முடிவடையவில்லை என்றும் வருகிற 10ம் தேதி வரை கடலோர பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்ற வகையில் கடந்த இரண்டு நாட்களாக கடலூர் மாவட்டத்தில் லேசான மழை பொழிவு இருந்தது.

இதன் காரணமாக மீண்டும் ஆங்காங்கே மழைநீர் தேக்கம் பொதுமக்களை அவதிக்கு உள்ளாகி உள்ளது. கடல் சீற்றம் காரணமாக கடலூர் அருகே உள்ள தாழங்குடா உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் கடல் அரிப்புக் காரணமாக கடலில் இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். திடீர் கடல் சீற்றம், கடல் அரிப்பு உள்ளிட்டவை காரணமாக மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது. காற்றின் வேகம் கடல் பகுதியில் சற்று கூடியிருக்கும் என்றும் இதன் நிலை வானிலை தன்மைக்கு ஏற்ப மாறுகின்ற வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Sea erosion ,villages ,Cuddalore , Sea erosion in coastal villages near Cuddalore
× RELATED சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி...