உத்தரபிரதேச பஞ். தலைவராக பாகிஸ்தான் பெண் நியமனம்: வழக்குபதிந்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து வழக்குபதிந்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஜலேசர் கிராமத்தின் இடைக்கால கிராம பஞ்சாயத்து தலைவராக பாகோ பேகம் (65) என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, கிராம பஞ்சாயத்து உறுப்பினராக பாகோ பேகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்தாண்டு ஜனவரி 9ம் தேதி பஞ்சாயத்து தலைவர் ஷெஹ்னாஸ் பேகம் இறந்ததால், ​​பாகோ பேகம் இடைக்காலத் தலைவராக தொடர்ந்து பணியாற்றும்படி  கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இந்நிலையில், ‘பாகோ பேகம் இந்திய குடிமகள் அல்ல’ எனக் கூறி, உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ‘பாகிஸ்தான் குடிமகளான பாகோ பேகம், எங்கள் கிராமத்தின் உறுப்பினராகவோ, இடைக்கால தலைவராகவோ செயல்பட எந்த சட்டபூர்வமான உரிமையும் இல்லை. எனவே, பாகோ பேகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது. இம்மனுவை விசாரித்த உள்ளூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சுக்லால் பாரதி, இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்ட பாகோ பேகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட பஞ்சாயத்து அதிகாரி அலோக் பிரியதர்ஷி கூறுகையில், ‘சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து பாகோ பேகம் இந்தியாவில் உள்ள உறவினர்களை சந்திக்க வந்துள்ளார்.

அப்போது, இந்தியாவைச் சேர்ந்த அக்தர் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்திய தம்பதியான பின்னர், அவர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாத நிலையில், அவர் எப்படி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பெற்றார் என்பது தெரியவில்லை. கிராம பஞ்சாயத்து உறுப்பினராக தற்போது உள்ள அவரது குடியுரிமை குறித்த விசாரணைக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’ என்றார்.

Related Stories:

>