காதல் மனைவியின் ஆபாச வீடியோ வெளியிட்ட கணவன் அதிரடி கைது: விபச்சாரி என வதந்தி பரப்பிய கொடூரம்

திருமலை: ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை வரதட்சணையாக வாங்கி திருமணம் செய்து கொண்டு, கூடுதல் வரதட்சணை கேட்டு காதல் மனைவியின் ஆபாச வீடியோவை வெளியிட்டு சித்ரவதை செய்த திருப்பதி தேவஸ்தான ஊழியரான அப்பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டார். திருப்பதி திம்மநாயுடுபேட்டையை சேர்ந்தவர் ரேவந்த். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக உள்ளார். இவர் திருப்பதியை சேர்ந்த நிரோஷா என்ற இளம்பெண்ணை காதலித்து 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.

அப்போது, நிரோஷாவின் பெற்றோர் ரூ10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால், திருமணமான ஒரே மாதத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு ரேவந்த், மனைவியை துன்புறுத்தினாராம். அதற்கு நிரோஷா மறுத்துவிட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த ரேவந்த் நிரோஷாவுடன் ஆபாசமாக எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக தெரிகிறது. மேலும் நிரோஷா விபச்சாரி என்று குறிப்பிட்டு, அவரது செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார். இதனால் பலரிடமிருந்து நிரோஷாவிற்கு தொலைபேசி அழைப்புகள் வர துவங்கின.

அதிர்ச்சியடைந்த நிரோஷா, நேற்று திருப்பதி எஸ்பியிடம் புகார் அளித்தார். இதன்மீது விசாரணை நடத்த திருப்பதியில் உள்ள டிசா காவல் நிலையத்துக்கு எஸ்பி ரமேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரேவந்த்தை கைது செய்தனர்.

Related Stories:

>