×

கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் வரை எங்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை: மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் கோஷம்

புதுடெல்லி: எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் வரை, எங்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் தெரிவித்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் இன்று 37வது நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு அவர்களின் பிரதிநிதிகளோடு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில் நேற்று முன்தினம் 6வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், விவசாயிகளின் அமைப்புகள் வைத்த 4 அம்ச கோரிக்கைகளில் இரண்டில் உடன்பாடு ஏற்பட்டது.

அதாவது, சுற்றுச்சூழல் தொடர்பான அவசர சட்டத்தில் இருந்து  விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கப்படும். வைக்கோல்களை எரிப்பதற்காக  விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது. நீர்ப்பாசனத்துக்காக  விவசாயிகளுக்கு மாநிலங்கள் வழங்கி வருகிற மானியம் தொடர வேண்டும் என்ற  கோரிக்கை ஏற்கப்பட்டது. மற்ற இரண்டு கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் மற்றும் புதிய வேளாண் சட்டத்தை வாபஸ் பெறுதல் ஆகியனவாகும். இந்த 2 கோரிக்கை தொடர்பான அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை வரும் 4ம் தேதி மதியம் 2 மணிக்கு நடத்துவது என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

தொடர் போராட்டம் எல்லையில் நடைபெற்று வருவதால், விவசாயிகளின் அன்றாட அடிப்படை தேவைகளைப்  பூர்த்தி செய்வதற்காக திக்ரி மற்றும் சிங்கு எல்லையில் ‘கிசான் மால்கள்’  திறக்கப்பட்டுள்ளன. கல்சா என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம், இந்த  ஏற்பாட்டை செய்துள்ளது. அதில், பற்பசை, சோப்பு, சீப்பு, செருப்பு, எண்ணெய்,  ஷாம்பு, வெப்பமூட்டும் ஆடைகள், குப்பை பெட்டி போன்றவை இலவசமாக  வழங்கப்படுகின்றன. இந்நிலையில், விவசாய சட்டங்களுக்கு எதிராக காசிப்பூர் எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், நேற்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதுகுறித்து இன்று பஞ்சாப் மாநிலம் ரோபரைச் சேர்ந்த விவசாயி ஹர்ஜிந்தர் சிங் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் வரை, எங்களுக்கு ஆங்கில புத்தாண்டு இல்லை. அதனால், நாங்கள் எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்ைல. மத்திய அரசால் ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு கோரிக்கைகள் சட்டமாக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கைகளை அரசிடம் தெளிவாக தெரிவித்துவிட்டோம். சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் தங்கள் குடும்பங்களிலிருந்து ஒருமாதமாக பிரிந்தே உள்ளனர். ஒட்டுமொத்த விவசாயிகளும் தான் எங்கள் குடும்பம்’ என்றார்.

Tags : New Year , We do not celebrate the New Year until the demands are accepted: Candle-carrying farmers slogan
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!