×

கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு

கோவை: கோவை சங்கனூர் ரோட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையம் உள்ளது. இங்கே போலீசார் கஞ்சா வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலித்து வந்ததாக புகார் வந்தது. ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவர் தொழிலை விட்டுவிட்டதாக தெரிகிறது. இவர் மீது கடந்த காலங்களில் பல கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த நபரை செல்போனில் அழைத்து, ‘‘இன்னும் நீ கஞ்சா விற்பதாக தகவல் வந்துள்ளது. நாங்கள் கேட்கும் பணத்தை தரவேண்டும். இல்லாவிட்டால் அதிகளவு கஞ்சா இருப்பதாக வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவோம்’’ என மிரட்டியுள்ளனர்.

பயந்து போன அந்த வியாபாரி தனது மனைவி மகேஸ்வரியிடம் சொல்லி புலம்பியுள்ளார். கடந்த வாரம் கஞ்சா வியாபாரி போலீசாரை சந்தித்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். ‘‘நான் கஞ்சா விற்பனை செய்வதில்லை. என் மீது வழக்கு எதுவும் போடவேண்டாம்’’ எனக்கூறி கெஞ்சியுள்ளார். ஆனால் போலீசார், ‘‘இந்த தொகை போதாது. மேலும் 70 ஆயிரம் ரூபாய் தரவேண்டும். நாங்கள் 3 பேர் இருக்கிறோம். கஞ்சா விற்று பல லட்ச ரூபாய் சம்பாதித்து இருப்பாய். பணத்தை கொண்டு வந்து கொடு’’ என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கஞ்சா வியாபாரியின் மனைவி மகேஸ்வரி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

அவர்களின் ஆலோசனையின்படி, போலீஸ் கேட்ட 70 ஆயிரம் ரூபாயுடன் மகேஸ்வரி நேற்று மாலை சங்கனூர் ரோட்டில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கே பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் சரோஜினி, ஏட்டுக்கள் ராமசாமி, அருள்குமார் ஆகியோரிடம் பணத்தை கொடுத்து, தனது கணவர் மீது வழக்கு போடவேண்டாம் என கேட்டு கொண்டார். அந்த பணத்தை இன்ஸ்பெக்டரும், ஏட்டுகளும் வாங்கினர். அப்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்ெபக்டர் சரோஜினி மற்றும் 2 ஏட்டுக்களை சுற்றி வளைத்து பணத்துடன் பிடித்தனர். 3 பேர் மீதும் லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

அவர்கள் 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சரோஜினி 3 மாதம் முன்தான் போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு பணியிடம் மாறுதல் பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன் விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கை இவர்தான் விசாரித்தார். இதில் இவர் 2 குற்றவாளிகளை பிடிக்கவில்லை என தெரிகிறது. இவர் கோவைக்கு வந்த பின்னர் கஞ்சா விற்பனை வழக்குகள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கஞ்சா வியாபாரிகளை மிரட்டி பல லட்ச ரூபாய் வசூலித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tags : cannabis dealer ,inspector , Bribery of cannabis dealer's wife: Female inspector jailed
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது